மியூசிக் அகாட​மி​யின் சங்​கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டிருக்​கும் வயலின் இசை கலைஞர் ஆர்​.கே.ஸ்ரீராம்​கு​மாருக்கு `தி இந்து' குழு​மம் வழங்​கும் சங்​கீத கலாநிதி எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி விருதை இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரகு​மான் வழங்​கி​னார். உடன் மியூசிக் அகாட​மி​யின் தலை​வர் என்​.​முரளி, செய​லா​ளர்​ வி.ஸ்ரீகாந்த்​, பாம்​பே ஜெயஸ்ரீ, டி.எம்​.கிருஷ்ணா ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
கலை

மியூசிக் அகாடமியின் 99-வது இசை விழா தொடங்கியது: கர்னாடக இசையை உலகெங்கும் பரப்ப ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

கே.சுந்தரராமன்

சென்னை: சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா​வின் தொடக்​க​ நாள் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கர்​னாடக இசையை இளம் தலை​முறை​யினர் உலகம் முழு​வதும் பரப்ப வேண்​டும் என்​றார்.

சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை விழா நேற்று தொடங்​கியது. தொடக்க விழா​வில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​ கொண்​டு, குத்​து​விளக்​கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

மியூசிக் அகாட​மி​யின் சங்​கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டிருக்​கும் ஆர்​.கே.ஸ்ரீ​ராம்​கு​மாருக்கு ‘தி இந்​து’ குழு​மம் வழங்​கும் ரூ.1 லட்​சம் பணமுடிப்​புடன் கூடிய சங்​கீத கலாநிதி எம்​.எஸ்​.சுப்​பு​லட்​சுமி விருதை அளித்து சிறப்​புரை ஆற்​றி​னார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இளம் தலை​முறை​யினருக்கு எதி​லும் புது​மை​யைப் புகுத்​து​வ​தில் ஆர்​வம் உள்​ளது. அவர்​கள் பாரம்​பரிய​மான கர்​னாடக இசை​யிலும் தேர்ச்சி பெற வேண்​டும்.

இந்​தி​யா​வில் உள்ள அரங்​கங்​களில் கச்​சேரி செய்​வதோடு நிற்​காமல், இந்த இசையை உலகம் முழு​வதும் பரப்ப வேண்​டும். இதில் பக்​தி, அர்ப்​பணிப்பு என்று அனைத்து அம்​சங்​களும் உள்​ளன. இந்த இசையை மிகுந்த ஆர்​வத்​துடன், தனது மாணவர்​களுக்கு கொண்டு சேர்க்​கும் ஆர்​.கே.ஸ்ரீ​ராம்​கு​மாரை வாழ்த்​துகிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஆர்​.கே.ஸ்ரீராம்​கு​மார் தனது ஏற்​புரை​யில், “எம்​.எஸ். அம்மா எங்​கள் குடும்​பத்​தில் ஒரு​வர் போல்​தான். `தி இந்து' குழு​மம் வழங்​கி​யிருக்​கும் சங்​கீத கலாநிதி எம்​.எஸ்​.சுப்​பு லட்​சுமி விருது, எனக்கு மிகப் பெரிய அங்​கீ​காரம் ஆகும். அதை​யும் தாண்டி இதன்​மூலம், எனக்கு அவரது ஆசி கிடைத்​த​தாகவே நினைக்​கிறேன்” என்​றார்.

இதைத் தொடர்ந்து மியூசிக் அகாட​மி​யின் ஆண்டு மலர், விழா மலரை இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளி​யிட, அவற்றை ஆர்​.கே. ஸ்ரீ​ராம்​கு​மாரும், டி.எம்​.கிருஷ்ணா​வும் பெற்​றுக் கொண்​டனர்.

முன்​ன​தாக வரவேற்​புரை ஆற்​றிய மியூசிக் அகாட​மி​யின் தலை​வர் என்​.​முரளி பேசி​ய​தாவது: 1992-ம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்​படத்​தின் மூலம் அனை​வரை​யும் கவர்ந்​தவர் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த ஆண்​டுக்​கான மியூசிக் அகாட​மி​யின் சங்​கீத கலாநிதி விருதை 2026-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி ஆர்​.கே.ஸ்ரீராம்​கு​மாருக்​கு, பனாரஸ் இந்து பல்​கலைக்​ கழகத்​தின் முன்​னாள் இசைப் பேராசிரியர் மற்​றும் துறைத் தலை​வர் டாக்​டர் என்​.​ராஜம் வழங்​கு​வார்.

சங்​கீத கலா ஆச்​சார்யா விருதை பிரபல தவில் வித்​வான் தஞ்​சாவூர் கோவிந்​த​ராஜன், விதூஷி சியாமளா வெங்​கடேஸ்​வரன் பெறு​வார்​கள். டிடிகே விருதை கதகளி கலைஞர் மாடம்பி சுப்​பிரமணி​யன் நம்​பூ​திரி, வீணை விற்​பன்​னர்​கள் ஜே.டி.ஜெய​ராஜ் கிருஷ்ணன் மற்​றும் ஜெயஸ்ரீ ஜெய​ராஜ் கிருஷ்ணன் ஆகியோர் பெறுகின்​றனர்.

இசை அறிஞர் விருதை பேராசிரியர் சி.ஏ.ஸ்ரீதரா பெறு​வார். இந்த ஆண்டு 80 இசை நிகழ்ச்​சிகள் நடை​பெறுகின்​றன. சங்​கீத மும்​மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ முத்​துசு​வாமி தீட்​ஷிதரின் 250-வது பிறந்​த​நாள் விழா இவ்வாண்டு கொண்​டாடப்​படு​வ​தால், மியூசிக் அகாட​மி​யின் காலைக் கச்​சேரி​கள், கருத்​தரங்​கு​கள் அவரது க்ரு​தி​கள் தொடர்​பானவை​யாக இருக்​கும்.

ஜன.3-ம் தேதி தொடங்​க​வுள்ள 19-ம் ஆண்டு நாட்​டிய விழா​வில் பரத​நாட்​டிய கலைஞர் ஊர்​மிளா சத்​ய​நா​ராயணாவுக்​கு, ‘நிருத்ய கலாநி​தி’ விருதை, ஜப்​பான் நாட்​டின் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ வழங்​கு​கிறார். இவ்​வாறு அவர் பேசி​னார்.மியூசிக் அகாடமி செய​லா​ளர் மீனாட்சி சுமதி கிருஷ்ணன் நிகழ்ச்​சியை தொகுத்து வழங்​கி​னார். செய​லா​ளர் வி.ஸ்ரீ​காந்த் நன்​றி​யுரை ஆற்​றி​னார்.

SCROLL FOR NEXT