கலை

கடவுள் உருவமான அத்தி மரம்

பாலாஜி ஸ்ரீநிவாசன்

ஆண்டுதோறும் நடக்கும் உள்ள பூரி ஜகந்நாதர் கோவில் தேரோட்டம் உலகப் பிரசித்தமானது. மிகப் பிரமாண்டமான தேர்கள் மட்டும் அல்லாமல் இவ்விழாவிற்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன. மற்ற கோவில்களில் தேரில் பவனிவரும் உற்சவ மூர்த்திகள் போல் அல்லாமல் கருவறையில் உள்ள வழிபாட்டுப் படிமங்களான பாலபத்திரர், சுபத்திரை, ஜகந்நாதர் மற்றும் சுதர்சனரின் மரத்திருமேனிகள் இந்த உலாவில் பவனி வருகின்றன.

ஜகந்நாதரின் கருவறை உருவங்கள் மரத்தால் ஆனதால் ஆண்டுதோறும் பராமரிப்பிற்காக ‘அனவாஸர’ தினங்கள் என்று வழங்கப்படும் சில நாட்கள் வெளிக் கொண்டுவரப்பட்டு பின்னர் நிறைவாகத் தேர் உலா முடிந்து மறுநிர்மாணம் செய்யப்படுகின்றன. அதுமட்டும் அல்லாமல் 12,13 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய திருமேனிகள் உருவாக்கப்படுகின்றன.

பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் மண்டகப்பட்டு குடைவரைக் கல்வெட்டில் உள்ளதற்கேற்ப பல்லவர்/ பாண்டியர் காலத்திற்கு முன் தமிழகக் கோயில்கள் மண், சுண்ணம், மரம், உலோகம் போன்ற பல பொருட்கள் கொண்டு கட்டப்பட்டதை நாம்

அறிவோம். “மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க” என்று மணிமேகலையில் மரத்தாலும் பிற பொருட்களாலும் தெய்வ உருவங்கள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வகையில் கருவறைப் படிமங்களும் மண்,சுண்ணம் கொண்டு அமைக்கப்படுவதை இன்றளவும் காண்கிறோம். கல் மற்றும் சுதை சிற்பங்கள் மட்டுமின்றி மரச்சிற்பங்களும் திருமேனியாகவும் உற்சவ மூர்த்திகளாகவும் வழிபடப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன. சீனாவில் உள்ள புனிங் கோவிலில் இருக்கும் உலகத்திலேயே பெரிய மரச் சிற்பமான 75 அடிக்கும் மேற்பட்ட புத்த அவலோகிதேஸ்வரரான குவனின் உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

காஞ்சிபுரத்தின் புராதனமான தலமாக பேரருளாளப் பெருமாள் கோயில் விளங்கிவருகிறது. இங்கு நாம் இதன் கருவறையில் காண்பது கல்லால் ஆன பேரருளாளன் திருமேனி. இதற்கு முன் இக்கருவறையில் இருந்த அத்தி மரத்தால் ஆன பேரருளாளன் திருமேனி அகற்றப்பட்டு பேழையில் வைத்து அநந்த சரஸ் குளத்தின் நீர் ஆழத்தில் வைக்கப்பட்டுள்ளது. 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது பக்தர்களின் காட்சிக்கு மற்றும் வழிபாட்டிற்காகச் சில நாட்கள் வைக்கப்படுகிறது.

செம்மரம், தேக்கு மரம் போன்றவை இருப்பினும் வழிபாட்டிற்குப் பெரும்பாலும் அத்தி மரமே தேர்வு செய்யப்படுகிறது. பால் மரமான அத்தி பலகாலம் சிதையாமல் இருக்கும். மரப் படிமங்களின் அமைப்பு செவ்வியல் தன்மையிலானதாய் பல இடங்களிலும் வட்டார இயல் சார்ந்து மற்ற இடங்களிலும் இருப்பதற்கு அந்த உருவம் வழிபடப்படும் இடம் மற்றும் சமூகசார்பு காரணமாகிறது. மாயவரத்திற்கு அருகில் கோழிக்குத்தி என்னும் கிராமத்தில் வானமுட்டிப் பெருமாள் கோவில் கருவறையில் 14 அடி உயர அத்தி மரத்திருமேனி வண்ணப்பூச்சுடன் வழிபடப்படுகிறது.

கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் இன்றும் மரத்தால் ஆன மாரியம்மன் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. பூமாரி, முத்துமாரி என வெவ்வேறு பெயர்களால் வழிபட்டு வரும் இந்த திருவுருவங்கள் வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் அழகாகக் காடசியளிப்பவை.

ரேணுகா பரமேஸ்வரி வழிபாட்டில் தமிழகம் மற்றும் ஆந்திரக் கோயில்களில் அத்தி மரத்தால் ஆன ரேணுகாம்பாள் சிரசு மற்றும் பரசுராமனின் படிமம் வழிபடப்படுகிறது.

வட தமிழகத்தில் நாம் திரௌபதி அம்மன் கோவில்களில் உள்ள மரத்தால் ஆன திருமேனிகளின் வழிபாட்டைக் காணமுடிகிறது. திரௌபதி அம்மனின் திருவுருவம், அர்ச்சுனன், பீமன், தருமன் மற்றும் கிருஷ்ணனின் திருஉருவங்கள் இன்று மரத்திற்குப் பதிலாக செப்பு மற்றும் பஞ்சலோகத் திருமேனியாக மாற்றப்பட்டு விட்டது. இருப்பினும் திரௌபதியின் காவலர் போத்துராஜா படிமம் இன்றும் மரத்தால் செய்யப்பட்டு ஊர்வலம் எடுத்து வரப்படுகிறது.

திருவண்ணாமலை அருகே உள்ள மங்கலம் என்னும் ஊரில் மிகப் பிரம்மாண்ட போத்துராஜா திருவுருவம் மரத்தினால் செய்யப்பட்டுள்ளதைக் நாம் காணலாம். தேருடன் சேர்த்து 18 அடிக்கும் மேற்பட்ட அளவிலான மரச்சிற்பம், சிவப்பு பச்சை மஞ்சள் போன்ற ஒளிர்வண்ணங்கள் தீட்டப்

பட்டு கம்பீரமாக இருப்பதைக் காணலாம். “நின்றால் கோவில் நகர்ந்தால் தேர்” என்று கூறப்படும் வகையில் சக்கரத்துடன் கூடிய தேரின் மேல் அமர்ந்த வண்ணம் உள்ள இந்த மரப்படிமம் தமிழகத்தின் மிகப் பெரிய மரப் படிமங்களில் ஒன்றாகும்.

திரௌபதி அம்மன் வழிபாட்டில் தொடர்புடைய அரவான் திருவுருவங்களும் மரச் சிற்பங்களாய் இருப்பதைக் காணலாம். அரவான் உருவமும் ரேணுகாதேவி உருவம்போல் சிரம் மட்டும் அன்றாட வழிபாட்டிலும் ஆண்டிற்கு ஒருமுறை உடலுடன் பொருத்தியும் வழிபடப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அரவானின் அங்கங்கள் பிரித்து இணைக்கும் பாகங்களாய் கோயிலில் பாதுகாக்கப்பட்டு ஆண்டுவிழாக்களின் போது இணைத்து அலங்கரிக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

ஆண்டுதோறும் தேர்திருவிழாவின் போது வேளாங்கண்ணி மாதாவின் அலங்கரிக்கப்பட்ட மரச்சிற்பம் பவனி வருகிறது. தமிழகமெங்கும் பல ஆலயங்களில் அகற்றப்பட்ட மரச்சிற்பங்களைக் காண முடிகிறது. பராமரிப்பதற்குக் கடினமாகவும் நீராட்டம், அலங்காரம் போன்றவற்றிற்கு அசௌகரியமாக இருப்பதாலும் மற்ற கோயில்களுடனான போட்டியுணர்வாலும் பலரும் கல் மற்றும் உலோகப் படிமங்களை நாடுகின்றனர். இதுபோன்ற வாழும் தொன்மையான தடயங்களின் அரிய தன்மையையும் சிறப்பையும் உணர்ந்து பாதுகாத்து நமது பிற்காலச் சந்ததியினருக்கு கொடுப்பது நம் கடமை.

SCROLL FOR NEXT