திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. அப்படிப்பட்ட திருவாசகத்தின் பாடல்களுக்கு சிம்பொனி வடிவில் இசையமைத்து உலகம் முழுவதும் அந்தப் பாடல்களில் வெளிப்படும் அன்பு அலையைப் பரப்பியவர் இளையராஜா. அவர் சிம்பொனி வடிவில் இசையமைத்த பாடல்களில் வெளிப்படும் இசை நுட்பங்களையும் நயங்களையும் 'அறிவுச் சமூகம்' நடத்தும் இசைப் பெருவெடிப்பு மெய்நிகர் நிகழ்வில் அண்மையில் பகிர்ந்துகொண்டார் பியானோ வாத்தியக் கலைஞரான ஆன்டனி செபாஸ்டியன்.
திருவாசகத்தின் பெருமை, அதை உலக மக்களுக்கு இசையின் துணைகொண்டு வழங்குவதற்கு இளையராஜா இசைத் தவமாகச் செலவழித்த நாட்களுக்கும், மாணிக்கவாசகரின் இறுதி நாட்களுக்கும் உள்ள தொடர்பு, அன்பைப் போதிப்பதில் திருவாசகத்துக்கும் பைபிளுக்கும் இருக்கும் ஒற்றுமை, சிம்பொனி இசை வடிவத்தின் மகத்துவம், புடாபெஸ்ட் சிம்பொனி இசைக் கலைஞர்களிடம் இருந்து தனக்கு தேவைப்படும் இசையை இளையராஜா எப்படிப் பெற்றார் என்பதற்கான விளக்கங்களை விரிவாகவும் எல்லோருக்கும் புரியும் வகையிலும் பாடியும், சில இசைக் குறிப்புகளை கீபோர்டில் வாசித்தும் ரசிகர்களுக்கு பக்தி இசை மழையைப் பொழிந்தார் ஆன்டனி.
“காலமும் வரலாறும் சில நேரங்களில் மட்டுமே சில ஆளுமைகளை நமக்குத் தந்திருக்கின்றன. அப்படித்தான் இளையராஜாவையும் காலம் நமக்குக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் ஆளுமையைப் பற்றிப் பேசுவது என்பதே ஒரு சுகமல்லவா? ஒரு பெருமையல்லவா? இந்த கரோனா பெருந்தொற்றுக்கால ஊரடங்குச் சூழலை வசப்படுத்தி 'அறிவுச் சமூகம்' அமைப்பினைத் தொடங்கி, இளையராஜா பிறந்த (ஜூன் 2) மாதத்தை 'இசைப் பெருவெடிப்பு மாதம்' என்னும் பெயரில் கொண்டாட முடிவு செய்தோம். பத்திரிகையாளர், எழுத்தாளர், வாத்தியக் கலைஞர், பாடகர், பேராசிரியர் எனப் பல துறை சார்ந்த கலைஞர்களையும் இளையராஜாவின் இசை குறித்துப் பேசவைத்தோம்” என்கிறார் தமிழ் முதல்வன்.
கவிஞர், எழுத்தாளர், படத்தொகுப்பாளர், ஆவணப்பட இயக்குநர் எனப் பல முகங்கள் தமிழ் முதல்வனுக்கு உண்டு. கவிஞர் ஈரோடு தமிழன்பன், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், சமூகநீதிக் காவலர் பி.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடைய ஆவணப்படங்களைத் தற்போது இயக்கிவருகிறார் தமிழ் முதல்வன்.
“ஒரு காலத்தில் ஆபிரகாம் பண்டிதர் இசை மாநாடுகளை நடத்தினார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்குப் பிறகு காலத்தின் தேவையை நிறைவு செய்ய வந்ததுதான் இளையராஜாவைப் பற்றிப் பேசுதல் என்பது. ராஜாவைப் பேசுதல் என்பது இசையைப் பற்றிப் பேசுதல். இசையைப் பற்றி மிக ஆரோக்கியமாகப் பேசுதல். அதிலும் சமூக அக்கறையோடு, தேர்ந்த நுட்பமான அறிவுடன் அழகியலுடன் இசையைப் பேசுதல் என்பது இதுவே முதல் முறை. ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் அழகியலைப் பற்றிப் பேசினார். தமிழ் முதல்வனோ தமிழிசையின் உருவ அருவ அழகியலைப் பற்றிப் பேசுகிறேன். இதைவிட வேறென்ன சுகம் வேண்டும் எனக்கு?
இப்படியான அழகியலை, இவ்வாறான வரலாற்றை ஒருமுறை பேசிக் கடந்துவிட முடியுமா? அதனால், இளையராஜா பிறந்த ஜூன் மாதத்தை “இசைப் பெருவெடிப்பு மாதம்” என்று அடையாளப்படுத்தி ஆண்டுதோறும் வரலாற்று மாதமாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறேன். 'இசைப் பெருவெடிப்பு' என்கிற சொல் இளையராஜாவுக்கு அப்படியே பொருந்துகிறது. பிரபஞ்சத்தைத் தழுவி நிற்கும் இளையராஜாவின் இசைப் பேராற்றல், உலகத்தின் முதல் பெருவெடிப்பு என்றால் மிகையில்லை!” என்கிறார் தமிழ் முதல்வன்.
இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசகம்