அருங்காட்சியகங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் சிறப்புகளை மக்கள் உணர்வதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் தேதி சர்வதேச அருங்காட்சித் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்தின் கருப்பொருள் “அருங்காட்சியகச் சேகரிப்புகள் இணைப்புகளை உருவாக்கும்” என்பதாகும். உலகம் முழுவதும் இருக்கும் 35,000ற்கு மேற்பட்ட அருங் காட்சியகங்கள் இந்தக் கருப்பொருளில் சர்வதேச அருங் காட்சியகத் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.
சென்னையைச் சேர்ந்த தக்ஷிணசித்ரா அரங்கம், அருங்காட்சி தினத்தையொட்டி ஓவியர் வீர. சந்தானத்தின் ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக் கிறது. இக்கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள், பழைய மரபுகளோடு நவீன யுக்திகளை இணைத்து ஒரு சமகால ஓவியத் தாக்கத்தை ஏற்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஓவியர் வீர. சந்தானம். தோல்பாவைக்கூத்தின் படங்களிலிருந்து தூண்டுதல் பெற்று இவர் தனது ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார்.
மே 3-ம் தேதி ஆரம்பித்த இக்கண்காட்சி ஜூன் 15 வரை நடைபெறுகிறது. தொடர்புக்கு: - 044 - 27472603