‘நித்ய முக்தன்’ இசை நாடகத்தில் ஷீரடி சாய்பாபா மற்றும் காஞ்சி மகா பெரியவரின் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய சிறப்புத் திறன் குழந்தைகள். 
கலை

நாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்

செய்திப்பிரிவு

கே.சுந்தரராமன்

டாக்டர் அம்பிகா காமேஷ்வர் நடத்தும் ‘ரசா’ (RASA – ரமண சன்ருத்ய ஆலயா) அமைப்பு சார்பில் சென்னை நாரத கான சபாவில் ‘நித்ய முக்தன்’ என்ற இசை நாடக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. பகவான் ரமணரின் பாடலில் உள்ள ‘நித்ய முக்தன்’ என்ற வார்த்தையை மையமாக வைத்து இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8 மகான்களின் வாழ்வில் நடந்த அருள் சம்பவங்களை 8 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் தங்கள் இசை, நாடகம், நடனம் மூலமாக நிகழ்த்திக் காட்டினர்.

முதலில், காஞ்சி மகா பெரியவர் வாழ்வில் நடந்த தஞ்சை பெரிய கோயில் கோபுர நிழல் கீழேவிழாத ரகசியத்தை, நாடகமாக நிகழ்த்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மகா பெரியவரின் முகாமில் அவரது காலை அனுஷ்டானங்கள், உரையாடல்கள் போன்றவற்றை நுணுக்கமாக நடித்துக் காட்டினர்.

அடுத்து, ராமகிருஷ்ண பரமஹம்சர், தட்சிணேஸ்வர் ராதாகாந்தன் கோயிலில் செய்த காளி பூஜை முறைகள், காளி கங்கை நதியில் செல்வது போன்ற காட்சிகள் அரங்கேறின. கங்கை நதியின் அமைதியான ஓட்டத்தை உணர்த்த, பின்னணியில் ஹமீர் கல்யாணி ராகம் இசைக்கப்பட்டது அற்புத அனுபவம்.

விசிறி சாமியார் எனப்படும் யோகி ராம்சுரத்குமார், தன் பக்தரை சிருங்கேரி அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளிடம் அனுப்பி பாதுகை வாங்கி வரச்சொன்ன சம்பவத்தையும், இரு அருளாளர்கள் இடையே நடைபெற்ற ஞான பரிபாஷையையும், உயர்ந்த முக்திக்கு வழங்கப்பட்ட எளிய உபதேசத்தையும் குழந்தைகள் வெகு இயல்பாக நடித்துக் காட்டினர்.

தீபாவளி அன்று விளக்கேற்ற எண்ணெய் இல்லையே என்று ஏங்கித் தவித்த குழந்தைகளுக்கு ஷீரடி மகான் அருள்பாலிக்கும் காட்சி அடுத்து அரங்கேறியது. பாபாவின் மகிமையால் தண்ணீரைக் கொண்டே விளக்குகள் ஏற்றப்பட்டன. குழந்தைகளின் ஏக்கத்தை வெளிப்படுத்த சுப பந்துவராளி ராகம் கையாளப்பட்டது.

விலங்குகளிடம் பாசம் காட்டும் ஸ்ரீரமணரின் வாழ்வில் நடந்த மாற்றுத் திறன் சிறுவன் - குரங்கு ராஜா கதையை இக்குழந்தைகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

அடுத்தபடியாக, கேரளாவைச் சேர்ந்த நாரணத்து ப்ராந்தன் என்பவரது கதையின் மூலம் காளியின் தாண்டவம், அருள் விளக்கப்பட்டன. கிடைக்கும் அரிசியை சமைத்து உண்ணும் நாரணத்து ப்ராந்தன், இடுகாட்டில் காளியின் நடனத்தைக் கண்டதால், வரம் அருள்வதாக கூறுகிறாள் காளி.

வரம் வேண்டாம் என்று கூறியும், காளியின் வற்புறுத்தலால், தனது ஒரு காலில் உள்ள வீக்கத்தை மறு காலுக்கு மாற்றும்படி கேட்கிறார் நாரணத்து ப்ராந்தன். அவர் மூலம் ஹாஸ்ய ரஸத்தையும், காளியின் மூலம் ரவுத்திரத்தையும், வரம் தரும் தருவாயில் அவளது அருட்குணத்தையும் இக்குழந்தைகள் தங்கள் நடனத்தின் மூலம் சிறப்புற வெளிப்படுத்தினர்.

காஞ்சான்காடு, பப்பா ராமதாஸின் வாழ்வின் மூலம் அனைவருமே ராமர்தான் என்ற எண்ணத்தை தோற்றுவித்தனர். நிகழ்ச்சியின் இடையில், நாடகத்தின் மையக் கருத்து பாடலை ஒலிபரப்பியபோது, சிறு குழந்தைகள் ஓடிக்கொண்டே நடனமாடியது சிறப்பு.

நிகழ்ச்சி இடையே பொருத்தமான ஆடியோ, வீடியோ காட்சிகளை பூர்ணா தொகுத்திருந்தார். ஆங்கில வர்ணனையை சூரஜ் வழங்கினார். சிறப்புத் திறமைகளை தன்னுள் அடக்கியிருக்கும் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்து நிகழ்ச்சியை வழங்கிய ‘ரசா’ அமைப்பையும், அதன் நிறுவனர் டாக்டர் அம்பிகா காமேஷ்வரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

SCROLL FOR NEXT