கலை

திருச்சூர் வி.ராமச்சந்திரன் :நிறைவு தந்த அமைதி

செய்திப்பிரிவு

இசை ழா சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. சபாக்களில் பால்கனியில் அமர்ந்து மேடைக் கச்சேரியுடன் தங்கள் சொந்தக் கச்சேரியையும் ரசிகர்கள் தொடங்கிவிட்டார்கள். செஸ் போட்டியில் ஆனந்த் கோட்டை விட்டதிலிருந்து அன்ராய்ட் போன் வரை அலசப்படுகின்றன. ரசனைக்குப் பக்கவாத்தியமாகக் கேண்டீனில் இருக்கவே இருக்கிறது வடையும் தோசையும். நான் பத்து கல்யாணத்திற்குப் புக் ஆகிவிட்டேன் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார் பிரபல கேண்டீன் அமைப்பாளர். வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு சபா, டிக்கெட் விலையைக் கொஞ்சம் ஏற்றி அதிலேயே காபி, டிபன் இலவசம் என்று அறிவிக்கிறது.

பெரிய சபாக்களுக்கு மத்தியில் எளிமையாகச் சின்ன அரங்கத்தில் நிகழ்ச்சி களை நடத்துபவர்களும் உண்டு. அதில் ஒன்றுதான் மீனாட்சி கல்லூரி நிர்வாகம் நடத்தும் இசையோற்சவம். டிசம்பர் 8 அன்று திருச்சூர் வி.ராமச்சந்திரன் பாடினார். அப்படியே ஜி.என்.பி. அவர்களை நினைவுபடுத்தினார்.

தோடி (கார்த்திகேய காங்கேயா), பூர்வி கல்யாணி ( மீனாக்ஷி), மோகனம் (நன்னு பாலிம்ப) போன்ற ராகங்களில் உள்ள கீர்த்தனைகள் பிரதானமாக அமைந்தன. ராகங்களை அலசி, ஆராய்ந்து அவர் கையாண்ட விதம் ரசிகர்களைக் கை தட்ட வைத்தது. பக்தி பாடல்களைத் தமிழில் எழுதியவர்களுள் முக்கியமானவர் பாபநாசம் சிவன். அவருடைய ‘கார்த்திகேய காங்கேயா' கேட்போரை உருக வைக்கும். அதைத் தோடி ஆலாபனையில் உருகிக் காட்டி விட்டார் வித்துவான். ஆங்காங்கே குரு வின் பாணி பளிச்சிட்டது.

அவருடைய மனோதர்மம் வெளிப்பட்டது ‘ மீனாக்ஷி' என்று தொடங்கும் முத்துசுவாமி தீட்சிதரின் கிருதியில். கீழட்டம சுரங்களிலும் உயரட்டம சுரங்களிலும் லாகவமாகச் சஞ்சாரித்தது உவகையூட்டியது.

மோகனத்தில் கார்வைகள் வந்து விழுந்தன. அந்த ராகத்தின் நுணுக்கங்களை அவர் கையாண்ட விதம், காட்டிய பாவம், அனுபவம் தோய்ந்த முதிர்ச்சியைக் காட்டியது.

ஜி.என்.பி.யின் சொந்தச் சாகித்தியமான உன்னடியே கதி (பகுதாரி), சேவிக்க வேண்டுமையா (ஆந்தோளிகா) பாடல்கள் துக்கடா போல வந்து மனதை வருடின. திக்கு தெரியாத காட்டில் பாடும்போது குருவுக்கு ஏற்ற சிஷ்யர் என்று நிரூபித்தார்.

கடைசியாக வந்தே மாதரம் (ராக மாலிகை) பாடிக் கச்சேரியை முடித்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மனதை நிறைவடையச்செய்தது

SCROLL FOR NEXT