‘இந்தியப் பறவையியலின் தந்தை' சாலிம் அலியின் பிறந்த நாள் நவம்பர் 12. எந்நேரமும் பறவைகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு, அவற்றைப் பின்தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த அவருடைய பேரார்வத்தை என்னவென்று சொல்வது? இது தொடர்பாக அவருடைய சுயசரிதையிலிருந்து சுவாரசியமும் திகிலும் நிரம்பிய ஒரு பகுதி:
ஒரு சம்பவம்
‘பறவைகளை நோக்குதல்’ என்று அறியப்படும் களப் பணி அமைதியான பணிதான். ஆனால், சாகசங்களும் சில சமயம் இடர்ப்பாடுகளும் இல்லாத துறை என்று கூறிவிட முடியாது.
ஒரு மயிர்க்கூச்செறியும் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன். திபெத்தை சீனா விழுங்குவதற்குச் சில ஆண்டுகள் முன், 1945-ல் கைலாஷ் மானசரோவர் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தேன். அல்மோராவிலிருந்து லிபு ஏரி கணவாயை நோக்கி இமய மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தோம்.
பாதையின் மிகக் குறுகலான ஒரு பகுதியில்... இந்தப் பக்கம் ஆயிரம் அடி பாதாளம். அந்தப் பக்கம் முந்நூறு அடிக்குக் கீழே காளி நதி. என்னுடன் வந்த மலையேறும் உதவியாளர்கள் தங்குவதற்குக் கூடாரம் அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
தன்னந்தனியே
நான் தன்னந்தனியே கொஞ்ச தூரம் முன்னால் போனேன். அந்தக் கணத்தில் ஒரு சின்னஞ்சிறிய வண்ணப் பறவை... அந்த மஞ்சள் பூசிய யூகினா இன்றும் மனதிலிருந்து மறையவில்லை. ஒரு புதரின் உச்சியில் உட்கார்ந்தது. நான் நிற்கும் இடத்திலிருந்து சில கெஜ தூரம்தான். என் இருநோக்கியின் பார்வைக்குள் அந்தப் பறவை விழும் வகையில் நகர்ந்தேன். அது இன்னும் கொஞ்சம் மேலே எத்தியது.
எனவே அதைத் தெளிவாகக் காண்பதற்காக இருநோக்கியிலிருந்து விழிகளை அகற்றாமலே, இன்னும் ஒரு எட்டு பின்னால் எடுத்து வைத்தேன். ஒரு கூழாங்கல் உருண்டு விழுந்து சத்தம் எழுப்பிக்கொண்டே கீழே போயிற்று. சத்தம் மாறுபட்டிருந்தது. முதுகுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்கிற பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாமல், எங்கே இருக்கிறோம் என்பதைப் பற்றிய ஞாபகமும் இன்றி நகர்ந்திருந்தேன்.
உலகம் மறந்து
கூழாங்கல் விழுந்த சத்தத்துக்குப் பிறகும் எதையும் உணராமல் என்ன சத்தம் என்று தோளுக்குப் பின்னால் தலையைத் திருப்பினேன், என் முடி சிலிர்த்துவிட்டது. மலை விளிம்பின் ஓரத்துக்கே வந்துவிட்டேன் என்பதை மின்னலடித்தது போல உணர்ந்து, மாசேதுங்கின் சீர்திருத்த வேகத்துக்கு இணையான வேகத்தில் சட்டென்று முன்னால் தாவினேன்! இரண்டே இரண்டு அங்குலம்தான். கூழாங்கல்லைத் துரத்திக்கொண்டு மொத்தமாக உலகைவிட்டுப் போய்ச் சேர்ந்திருப்பேன்.
மலையேறும் உதவியாளர்கள் அன்றைய பயணத்தை முடித்துவிட்டு நாளின் முடிவில் ஓய்வெடுக்கத் தயாராகும்போது நான் காணாமல் போயிருந்தால், என் திடீர் மறைவு பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்பது இப்போதும் மலைப்பாக இருக்கிறது. ஏனென்றால், ‘பறந்து போய்விட்ட பறவையாளனின்' உடலைப் பாதாள நதியிலோ, இன்னும் கீழே அதல பாதாளத்திலோ கண்டெடுப்பது என்பது கோடியில் ஒரு வாய்ப்புதான்.
அற்புத வாழ்க்கை
கணிதத்தில் ஆரம்பப் பாடக் கணக்குகளைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதைவிட இளம் பருவத்தில் அற்புதமான இடங்களில் அருமையான பறவைகளைத் துரத்திக்கொண்டு அலைவதை நேசித்தவன் நான். அன்று தொட்டு அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகச் சுகம் காணவும் ஆன்மாவை மேம்படுத்தவும் அவை உதவின. இயந்திரமயமாகிவிட்ட அதிவேக யுகத்தின் போலி நாகரிகப் பரபரப்பிலிருந்தும் சலசலப்பிலிருந்தும் விலகி ஒதுங்கி, மலை சிகரங்களிலும் காட்டின் உள்ளடங்கிய பகுதிகளிலும் தென்படும் ஒவ்வொரு காட்சியும் இனிக்கும். அந்த உன்னதச் சூழ்நிலைகளை அனுபவிக்க இவ்வாழ்வு ஒரு சாக்காக இருந்தது. இதுவும் ஒரு வகை தப்பி ஓடல் என்பீர்கள். இருக்கலாம், ஆனால், இதற்கு என்று நியாயப்படுத்திக்கொள்ளும் முயற்சி அவசியம் இல்லையே!
(பறவையியலாளர் சாலிம் அலி, தனது சுயசரிதையை ‘The Fall of a Sparrow' என்ற பெயரில் எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவத்தை நாக. வேணுகோபாலன் மொழிபெயர்ப்பில், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது)