கலை

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்நேயத்தைப் பதிவுச்செய்தவர்கள் தமிழர்கள்: அறிவுமதி

செய்திப்பிரிவு

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிர்நேயத்தைப் பதிவுச் செய்தவர்கள் தமிழர்கள் என்றார் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி.

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கரூர் மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய 36-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சியில் ‘தமிழ்உயிர்நேயம்’ என்ற தலைப்பில் அவர் பேசியது:

“உலகத்துக்கு மொழியைக் கண்டெடுத்துக் கொடுத்த தமிழன் கைநாட்டாக இருந்துள்ளான், நமது முன்னோர் வாழ்க்கையில் இருந்து நம் வாழ்க்கை நிறைய மாறிவிட்டது. எழுதுக்கோல் பிடித்து கவிதை, கட்டுரை எழுதுகிறோம், பச்சை மையால் நிர்வாகம் செய்கிறோம், இவற்றை கல்வி நமக்கு கொடுத்திருக்கிறது.

இசை, நடனம், கூத்துக்கலை ஆகியவற்றை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம், அறுவடை முடிந்த வயலில் கூத்து நடத்தியவர்கள் நம் முன்னோர். தற்போது அடித்தட்டு மக்களிடையே மட்டுமே அக்கலை உள்ளது.

இடைத்தட்டு மக்களிடையே இக்கலைகள் இல்லை. கோவலன் செல்வந்தன், இசை, நடனம் அறிந்தவன், கண்ணகி பேரழகி, வசதி படைத்தவள் ஆனால், இசை, நடனம் அறியவில்லை. இசை, நடனம் தெரிந்த மாதவி கோவலனுக்கு தேவைப்பட்டிருக்கிறாள். இசை, நடனம் ஆகியவற்றை இழந்துவிடக்கூடாது என இளங்கோவடிகள் எச்சரித்துள்ளார்.

புத்தகங்களைப் படித்து, படித்து மட்டுமே அறிவைப் பெற்றுவிட முடியாது. கைநாட்டு நபர்களிடம் இருந்துதான் வாழ்வை கற்றேன். படிக்காத மக்களை தாழ்வாக எண்ணிவிடக்கூடாது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உயிர்நேயத்தோடு இருந்துள்ளார்கள். சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மூலம் இதனை அறியமுடிகிறது. ஒரு மரத்தின் இலையில் இருந்து ஒரு நோய்க்கு மருந்து பெறலாம், அதன் பாகங்களில் இருந்தும் மருந்து பெறலாம். ஆனால், அந்த மரத்தையே அழித்துதான் மருந்து என்றால், உயிரே தேவையில்லை. நெல் அறுவடைக்கு முன் சிறு வாத்தியம் வாசித்து அந்நிலத்தில் உள்ள பறவைகள் தாங்கள் இட்டுள்ள முட்டைகளை அகற்றிக் கொள்ளவும், தங்கள் குஞ்சுகளை எடுத்துக்கொள்ளவும் எச்சரிக்கை செய்யும் வழக்கம் இருந்துள்ளது. தன்னைச் சார்ந்த சிறு உயிருக்கும் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த மனோபாவம் இதற்கு காரணம்.

முன்பு கரும்பு வெட்டிய பிறகே தோகையை கழிப்பார்கள், தற்போது தீ வைத்து அழிக்கப்படுகிறது. இதனால் கரும்புக் காட்டை நம்பி வாழும் உயிர்கள் அழிந்துபோகின்றன.

நெய்தல் நிலத்து தலைவன், “தலைவியை சந்திக்க தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, கடற்கரையோரம் உள்ள நண்டுகள் உயிரிழந்துவிடாத வகையில் தேரைச் செலுத்து” என்று தேரோட்டியிடம் சொல்கிறான். முல்லை நிலத்து வழியே செல்லும் தலைவன், அங்கு காதலில் கட்டுண்டு கிடக்கும் வண்டுகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக்கூடாது என தன் தேரின் மணிகளைக் கட்டி சப்தம் எழுப்பாமல் செய்த பிறகு தேரைச் செலுத்தச் சொல்கிறான். நண்டை விலங்காக எண்ணாமல் அதுவும் தன்னைப் போல ஒரு உயிரென மதித்து சங்க காலத்தில் நண்டின் வளையை சிறுமனை எனக்குறிப்பிட்டுள்ளனர்.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிர்நேயம் குறித்து அறிந்து, அவற்றைப் பதிவு செய்தவர்கள் தமிழர்கள்” என்றார்.

வாசகர் வட்ட தலைவர் உ.சங்கர் வரவேற்றார், மாவட்ட நூலக அலுவலர் மு.பழனிச்சாமி, மாவட்ட மைய நூலகர் செ.செ.சிவக்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.விமலாதித்தன் நன்றி கூறினார். பெ.மோகன்ராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

SCROLL FOR NEXT