கலை

மாளவிகா சருக்கை - கட்டுண்டோம்! விடுதலை வேண்டாம்!

எஸ்.சிவகுமார்

மாயக் கண்ணன் படுத்தி எடுக்கிறான். யசோதையால் இதைத் தாள முடியவில்லை. எப்படி அவனை அடக்குவது? சுற்று முற்றும் பார்க்கிறாள். உரல் ஒன்று தென்படுகிறது. அதில் அவனைக் கட்டி வைக்கிறாள். இதையெல்லாம் ஓரிரு வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.

நடனக் கலைஞர் மாளவிகா சருக்கை மேடையில் தன் நாட்டிய தரிசனம் மூலமாகப் படிப்படியாக இதையெல்லாம் நிகழ்த்திக் காட்டினார்.

இந்தியாவின் தலைமை நீதிபதி சதாசிவம், டிசம்பர் 10 அன்று ‘பவன்ஸ் நாட்டிய உத்ஸவ் – 2013’ஐச் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் - டாக் அரங்கில் தொடங்கி வைத்தார். நாட்டியத் திலகம் மாளவிகா சருக்கைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து மாளவிகாவின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அங்குதான் இந்த அற்புதமும் நிகழ்ந்தது. ‘என்ன தவம் செய்தனை’ எனும் பாபநாசம் சிவனின் பாடலை (காபி ராகம்) அபிநயத்திற்கு எடுத்துக்கொண்டார் மாளவிகா.

பாபநாசம் சிவன் அனுபவித்தது இதைத்தான்: “யசோதையே! எந்த விதமான சக்தி அளிக்கவல்ல தவத்தை நீ செய்திருப்பாயோ? அவனை உரலில் கட்டிப் போட்டிருக்கிறாய்! அவனே உன்னை அம்மா என்றழைக்கும் பாக்கியம் பெற்றுள்ளாய்! அவன் ஒரு மிகப் பெரிய சாதனையாளன்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்! என்ன பேறு பெற்றாயோ!”

அபிநயத்தில் முக்கியமானது, ஒருவரே இரண்டு அல்லது மூன்று குணச்சித்திர வடிவங்களை மேடையில் நின்று ஆடி நமக்குப் புரிய வைக்க வேண்டும். பாட்டு பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். அன்று மாளவிகா தாயாக முலைப் பால் கொடுத்தார், தூளியில் இட்டுத் தாலாட்டினார், அலங்காரங்கள் என்றும் உடைகள் என்றும் பலவற்றைக் கண்ணனுக்கு அணிவித்தார். யசோதையாய் அவள் அனுபவித்ததைப் பாடலாசிரியர் அனுபவித்திருக்கிறார்.

மாளவிகா தானும் இதே நிலையை அனுபவித்து, உடன் நம்மையும் அனுபவத்தின் எல்லைக்கே இட்டுச் சென்றார்.

தாயாக மாறிய மாளவிகா ஒரே நொடிப் பொழுதில் தன்னைக் குழந்தைக் கண்ணனாக மாற்றிக்கொண்டது வியக்கவைத்தது. “நான் இனி எந்தத் தவறும் இழைக்க மாட்டேன்! உன்னைக் கெஞ்சுகிறேன்! என்னை அவிழ்த்துவிடு!” இவற்றைப் பேசாமல் பேசினார் மாளவிகா. முக பாவத்தைக் காட்டி கெஞ்சினான் கண்ணன். விடுதலை வேண்டி செய்கை மூலமாக உணர்த்துகிறான்.. “காணக் கண் கோடி வேண்டும்” என்று பாபநாசம் சிவன் பாடியிருக்கிறார். இந்த நாட்டிய நிகழ்ச்சியைக் கண்ணுற்றிருந்தால் இவ்வரிகளையே மிகவும் அழுத்தம் திருத்தமாக மீண்டும் பாடியிருப்பார். நிச்சயம்!

மாளவிகாவின் நடனத்தில் நிருத்தமும், நிருத்தியமும் நாட்டியமும் சரிசமமான பங்கை வகித்தன. யசோதையாகவும் கண்ணனாகவும் பாவத்தைப் பொழிந்து நிருத்தியம். இடையிடையே நிருத்தம் ஜதிகளாகவும் ஸ்வரக் கோர்வைகளாகவும் நமது மனதைக் கவர்ந்தது. தக்க தருணங்களில் நாட்டியமும் சேர்ந்துகொண்டது.

இந்த நாட்டிய நிகழ்வில் மேடையை அலங்கரித்த பக்க வாத்திய விதுஷிகள் எஸ்.லதா (நட்டுவாங்கம்), நந்தினி ஷர்மா (வாய்ப்பாட்டு) மற்றும் ஸ்ரீலக்ஷ்மி வெங்கட்ரமணி (வயலின்). லயத்துணையாக நின்றவர் வித்வான் நெல்லை பாலாஜி (மிருதங்கம்). அனைவரும்

தத்தமது பங்களிப்பைத் திறம்படச் செய்தனர்.

கண்ணன் உரலில் கட்டுண்டான்! நாம் மாளவிகாவின் நடனத்தில் கட்டுண்டோம்.

SCROLL FOR NEXT