ரித்விக் ராஜாவின் கச்சேரியில் வித்தியாசமான சில முத்திரைகள் தெரிகின்றன. மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் நடத்திய 34ஆவது இயல் இசை நாடக விழாவில் பாடிய இவர் வழக்கத்திற்குச் சற்று மாறாகக் கௌளை ராகத்தில் உள்ள ‘தியாகராஜ பாலயாசுமாம்’ என்ற தீக்சிதர் கிருதியை வழங்கினார் (வழக்கமாகப் பாடுவது ஸ்ரீ மஹாகணபதி ரவதுமாம்).
அடுத்துக் கச்சேரி ரசிகர்களின் “அன்றாடப்” பாடலான ‘ஞாநமொஸகராதா’ எனும் பூர்விகல்யாணி ராகப் பாடலை வழங்கினார். இதிலும் ஒரு புதுமையைச் செய்தார். இந்தக் கிருதியை, ‘நீ நாமமுசே நாமதி’ என்ற மேல் ஸ்தாயில் ஆரம்பிக்கும் அனுபல்லவியில் தொடங்கிப் பாடி, ஜனரஞ்சகமான பாடலிலும் தனித்துவத்தை வெளிப்படுத்த இயலும் என்பதை வெளிப்படச் செய்தார்.
இப்படி ஆரம்பித்த தருணத்தை உணர்ந்து, இது ஒரு புதிய முயற்சி என்பதைத் தனது ஓங்கிய மிருதங்க ஒலியினால் மேலும் செழிப்படையச் செய்தார் மிருதங்கம் வாசித்த பரத்வாஜ். ஏக கரகோஷம்!
கச்சேரியில் முக்கியப் பாட்டாக எடுத்துக்கொண்ட ‘தாசரதி’ (தியாகராஜர் - தோடி) எனும் பாட்டையும் அனுபல்லவியின் நடுவில் வரும் ‘பிராகாசிம்ப’ என்ற வரியிலிருந்து துவங்கினார், ரித்விக். இவர் என்ன ஒரு அனுபல்லவி ஸ்பெஷலிஸ்டா என்று நினைக்கும் விதத்தில் இவரது கச்சேரியின் போக்கு அமைந்துவிட்டது.
இடையில் பாடிய ‘பதவிநிஸத்பக்தி’ என்ற சாலகபைரவி (தியாகராஜர்) ராகப் பாடலும் இந்த ராகத்தின் சிறிய ஆலாபனையின் நடுவில் இருந்து சுயம்பாக உதித்தது போன்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது.
பாடல்களின் அர்த்தம் தெரிந்து, அதில் லயித்துப் பாடினால்தான் இது போன்ற வித்தியாசமான புதிய முயற்சிகளை வெற்றியுடன் கையாண்டு சிறப்புடன் வழங்க முடியும். இந்த அனுபல்லவி ஆரம்பங்களை ரித்விக் ராஜா தனக்குள் ஒரு நிதானத்தை ஏற்படுத்திக்கொண்ட பிறகே பாட யத்தனித்தார்.
இது போன்ற ‘அனுபல்லவி – முதலில்’ எனும் பாடல்கள் நிறைய உண்டு (ஆபோகியில் அமைந்த ‘சபாபதிக்கு’ பாடலின் அனுபல்லவி ‘கிருபாநிதி இவரைப் போலே’; ‘என்றைக்குச் சிவகிருபை’ என்ற முகாரி ராகப் பாடலின் அனுபல்லவி ‘கன்றின் குரலைக் கேட்டு’).
வயலின் ராகுலின் வசம். இவர் சங்கீதக் கலாநிதி எம். சந்திரசேகரனிடம் இசை பயின்றுவருபவர். குருவை போலவே இவரிடம் அலாதியான அழுத்தமான வில் பிரயோகத்தைக் காண முடியும். ஆலாபனைகளின்போது அந்தந்த ராகங்களுக்கு உகந்த சங்கதிகள் வாசித்து, ஸ்வரக் கோர்வைகளில் கணக்கு தவறாமல் வயலினை இழைத்துக் கச்சேரியைக் களை கட்டச் செய்தார்.
இங்கு நடத்தப்படும் கச்சேரிகள் அனைத்தும் காலஞ்சென்ற ஓபுல் ரெட்டி மற்றும் அவரது துணைவியார் ஞானாம்பாள் நினைவாக நடத்தப்படுகின்றன.
பாட்டு: ரித்விக் ராஜா
வயலின்: ராகுல்
மிருதங்கம்: பரத்வாஜ்
நாள்: 13-12-2013
மதியம் 2.15- மாலை 4.00
அரங்கம்: ஓபுல் ரெட்டி ஹால் (வாணி மஹால்)