சென்னை/கலிபோர்னியா: டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரபல வயலின் வித்வான் பத்மபூஷண் லால்குடி ஜெயராமனின் சகோதரியான ஸ்ரீமதி பிரம்மானந்தம், தனது பெண் அனுராதாவின் இளம் வயதிலேயே அவரது இசை அறிவு, நடிப்புத் திறமை ஆகியவற்றை அறிந்து, அவரது திறமையை மெருகேற்றினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் (சான் பிரான்ஸ்சிஸ்கோ பே பகுதி) 1989-ம் ஆண்டு அனுராதா ஸ்ரீதரால் நிறுவப்பட்ட டிரினிடி இசைப் பள்ளி (Trinity center for Music) இதுவரை நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. தனது முன்னோரின் பாரம்பரியத்தில் (லால்குடி பாணி), அனுராதா ஸ்ரீதர் தனது சீடர்களை வழிநடத்தி, அர்ப்பணிப்புள்ள தொழில்முறை இசைக் கலைஞர்களாக மாற்றியுள்ளார்.
அண்மையில் இப்பள்ளியின் 35-வது ஆண்டு விழாவும், அனுராதா ஸ்ரீதரின் 50-ம் ஆண்டு கலைப் பயண நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டன. சான் டியாகோவில் உள்ள இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் நால்வர் வயலின் இசை நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் நூற்றாண்டு கொண்டாட்டமாக சாய் பஞ்சரத்ன நிகழ்ச்சி, வால்மீகி ராமாயணம் தொடர்பான நாட்டிய நாடகம், ஸ்டெல்லார் பே பகுதி கலைஞர்களின் நவுகா சரித்திர நாட்டிய நாடகம் மற்றும் மகேஸ்வர சூத்திரங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் யூதர் மையத்தில் ‘பஜரே பஜ மானஸ’ என்ற தலைப்பில் சத்குரு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. நுணுக்கமான மேடை நிர்வாகம், தெய்வீக இசை, திறமையான கலைஞர்கள் என்று அனைத்தும் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சிறந்த இசை அமைப்பாளரும், புகழ்பெற்ற இசைக் கலைஞருமான குரு ஸ்ரீராம் பிரம்மானந்தம் உள்ளிட்டோரின் லயக் கோர்வை, கொன்னக்கோல் ஆகியன நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின.
டிரினிடி கலைவிழாவின் ஒருங்கிணைப்பாளர் முரளி ராகவன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ஸ்ரீராம லலித கலா மந்திர் இசைப் பள்ளியின் நிறுவனரும் இயக்குநருமான சங்கீத கலா விபூஷிணி ஜெயஸ்ரீ வரதராஜன், எரியா பல்கலைக்கழக தலைவரும், சிலிக்கான் ஆந்திராவின் தலைவரும், இந்திய இசை, நடன வல்லுநர் ஆனந்த் குச்சிபோட்லா கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். பிரபல மிருதங்கக் கலைஞர் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன், குரு ஸ்ரீராம் பிரம்மானந்தத்துக்கு ‘லய பிரவாக நிதி’ விருதை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறந்த கலைஞர்கள் ஸ்ருதி சாரதி, அபூர்வ கிருஷ்ணா ஆகியோருக்கு ‘வாத்ய கலா உஜ்வலா’ விருது, மூத்த சீடர்கள் பார்த்திவ் மோகன், ஷ்ரியா ஆனந்த், அபூர்வா ஆனந்த், அனிவர்தின் ஆனந்த், ஐஸ்வர்யா ஆனந்த் ஆகியோருக்கு ‘கான கலா குஷலா’ விருது வழங்கப் பட்டன. நிறைவாக அனுராதா ஸ்ரீதர், தனது கலைப்பயணத்துக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த பெற்றோர் ராமநாதன் பிரம்மானந்தம் - லால்குடி ஸ்ரீமதி பிரம்மானந்தம் ஆகியோரின் இசைப் பணி மற்றும் சேவையை பாராட்டினார். மேலும், கீபோர்டு இசைக் கலைஞர் வெங்கடேசன் விஜயகுமார், பே பகுதி அமைப்பினர், அறம் செய் தொண்டு நிறுவனத்தினர் அனைவருக்கும், அனுராதா ஸ்ரீதர் நன்றி தெரிவித்தார்.