விவாதக் களம்

வெளுத்துவாங்கும் வடகிழக்கு பருவமழை: உங்கள் பகுதி நிலவரம் என்ன?

பாரதி ஆனந்த்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை - அக்.29) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழக அரசின் பல்வேறு துறைகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. மாநகராட்சி, பொதுப்பணித் துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை என துறைசார் ஆலோசனைக் கூட்டங்கள் களைகட்டின. 2015 சென்னை பெருவெள்ளம் கற்றுத்தந்த பாடம்தான் என மக்களே பேசிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டங்கள் அமைந்தன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் பலரும் தெரிவித்தனர்.

ஆனால், நேற்றிரவில் இருந்து இப்போது வரை பெய்துள்ள மழைக்கே சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விழாமல் வாகனத்தைச் செலுத்துவதே சாகசமாகியிருக்கிறது. இன்று காலை சென்னை கிண்டி, கத்திப்பாரா பகுதியில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கழிவுநீர்க் கால்வாய்களை சீர்செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால் ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது என திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுஒருபுறம் இருக்க, கொசஸ்தலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளால் வட சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இதே கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றின் சீர்கேடுகளால் மூழ்குவது வட சென்னை மட்டுமல்ல... தென் சென்னைக்கும் அந்த ஆபத்து இருக்கிறது என்பதுதான் உண்மை என 'தி இந்து'வின் மூத்த பத்திரிகையாளர் டி.எல்.சஞ்சீவிகுமார் தனது 'வட சென்னைக்கு மட்டுமல்ல..: எண்ணூர் சீரழிவுகளால் தென் சென்னைக்கும் ஆபத்து - வெள்ளம் வந்தால் ஒட்டுமொத்த சென்னையும் மிதக்கும்'என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.

இந்நிலையில், சென்னைவாசிகளே இன்றைய மழைக்கு உங்கள் பகுதி எப்படி இருக்கிறது எனத் தெரிவியுங்கள். கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கின்றனவா? குப்பைகள் அகற்றப்பட்டு மழைநீர் வடிய பாதை இருக்கிறதா? மின்சார பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? பிரச்சினை ஏற்பட்ட பகுதிகளில் அரசு இயந்திரங்கள் உடனே சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனவா? இல்லை எல்லாம் சரியாக இருக்கிறதா! நிறை குறை எதுவாக இருந்தாலும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

புகைப்படங்களாகவோ, வீடியோவாகவோ இருந்தால் online.editor@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

பருவமழைக்கு அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறது; பொதுமக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறு முயற்சியே இது.

SCROLL FOR NEXT