தலைமறைவு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவர உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த சந்தேஷ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதாவது:
தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என பத்திரிகை குறிப்புகளை வெளியிடுகிறார் ஷிண்டே. பத்திரிகைகள் வாயிலாக இதை நடத்தி விடமுடியுமா. இந்த தகவல்களை பத்திரிகைகளில் வெளியிடுவது சரியானதா?ஒசாமா பின்லேடனுடன் அமெரிக்கர்கள் எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தினார்களா அல்லது பின் லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது பற்றிய திட்டத்தை பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் அவர்கள் பேசி இருப்பது உண்டா?
தாவூத் விஷயத்தில் குறைந்தபட்ச முதிர்ச்சி கூட அரசு காட்டவில்லை. ஷிண்டேவின் அறிக்கைகள் வெட்கித் தலைகுனிய வைக்கிறது என்றார் மோடி.
சிதம்பரம் கண்டனம்
இதுபற்றி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் மோடி வேறு நல்ல மாற்று திட்டம் வைத்திருந்தால் தெரிவிக்கலாம். தாவூதை கைது செய்து அழைத்து வர அரசு அதிரடிப் படையை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க முடியாது. அவருக்கு பாகிஸ்தான் அரசு பதுங்கி இருக்க உதவுகிறது. நாங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சொல்பவர்கள் அரசு என்ன செய்யவேண்டும் என்பதற்கான மாற்று யோசனைகளை தெரிவிக்கலாம்.
கராச்சியில் தாவூத் வசிப்பதும் அவர் அங்கிருந்து மத்திய கிழக்குக்கு செல்வதும் திரும்புவதும் எங்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் பாகிஸ்தானே அவருக்கு எல்லா பாதுகாப்பும் தரும்போது எப்படிஅவரை பிடிக்க முடியும். தாவூதுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் உள்ளது.
தாவூதை கைதுசெய்ய எங்களால் முடியும் என்றால் நிச்சயம் அதை செய்வோம். ஆனால் ரகசிய செயல்களில் ஈடுபடமுடியாது. பாகிஸ்தானுக்கு செல்லமுடியாது என்றார் சிதம்பரம்.
1993ல் நடந்த மும்பை தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய சதிகாரராக செயல்பட்டவர் என தாவூத் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். நாட்டில் நடந்த வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் தாவூத் பதுங்கி இருப்பதாக கூறும் இந்தியா, அவரை ஒப்படைக்கும்படி கோரிவருகிறது. பாகிஸ்தான் ஒத்துழைப்பு தர மறுப்பதால் தாவூதை கைது செய்து கொண்டுவருவது இயலாத ஒன்றாக உள்ளது