வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் மத்திய, மாநில அரசுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித்தரும் தொகுதியாக ஆம்பூர் விளங்குகிறது. வேலூர் மாவட்டத்தின் டாலர் சிட்டி என்று வர்ணிக்கப்படும் ஆம்பூரில் நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
தொகுதி மறுசீரமைக்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஆம்பூர் தொகுதியில் தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், பாக்கம்பாளையம், சின்னபள்ளிக்குப்பம், ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு, வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, விண்ணமங்கலம், சாண்றோர்குப்பம், ஆலாங்குப்பம், மின்னூர், வடக்கரை உள்ளிட்ட கிராமங்கள் முக்கியமானதாக விளங்குகிறது.
தோல் தொழில் மட்டுமின்றி, ஆன்மீக பூமியாகவும் ஆம்பூர் விளங்கி வருகிறது. பழமையான இந்து கோயில்களும், பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் இந்த தொகுதியில் அதிகம் காணப்படுகிறது. இது மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ள தொகுதியாக ஆம்பூர் விளங்கி வருகிறது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் தொகுதி உள்ளதால், இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இப்படி பல்வேறு சிறப்புகள் ஆம்பூரில் இருந்தாலும், மக்களின் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. குறிப்பாக ஆம்பூர் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனை தரம் உயர்த்தியும், அதற்கான வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை. மருத்துவர்கள் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது.
அதேபோல், ஆம்பூரில் கலைக்கல்லூரி கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான தோல் பதனிடும் தொழிற்சாலை கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 5 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில், 1996-ம் ஆண்டு இந்த தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால், பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
எனவே, லாபத்துடன் செயல்பட்டு வந்த மின்னூர் அரசு தோல் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை அப்படியே உள்ளது. கடந்த 5 ஆண்டில் ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.30 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கவில்லை.
இதுமட்டுமின்றி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்களும், அதன் மூலம் உயிர் பலிகளும் அதிகரித்து வருவதால், ஆம்பூரில் குறிப்பிட்ட இடங்களில் சுரங்கபாதை, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை ஏற்கபடாமல் உள்ளது இப்பகுதி மக்களிடம் வேதனை அளிக்கிறது.
அதேபோல், தோட்டாளம் மணல் குவாரி பிரச்சனை, தோல் கழிவுப்பொருட்கள் பாலாற்றில் கலப்பு, சாலை மற்றும் மின் விளக்கு வசதி இல்லாதது என பல்வேறு பிரச்சினைகளை ஆம்பூர் தொகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சந்தித்து வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக இரட்டை தொகுதியாக செயல்பட்டு வந்த ஆம்பூர் தொகுதி சீரமைக்கு பின்னர் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது. இதில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம்பாஷா தற்போது தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஆர்.பாலசுப்பிரமணியம் | அதிமுக |
2 | வி.ஆர்.நசீர்அகமது | திமுக- மனிதநேய மக்கள் கட்சி |
3 | ஆர்.வாசு | தேமுதிக |
4 | எம். அமீன்பாஷா | பாமக |
5 | கே.வெங்கடேசன் | பாஜக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வேலூர் வட்டம் (பகுதி): அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளைய்ம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை கிராமங்கள்.
வாணியம்பாடி வட்டம் (பகுதி) வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணான்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாப்பளபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் கிராமங்கள், ஆம்பூர் (நகராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,04,197 |
பெண் | 1,08,048 |
மூன்றாம் பாலினத்தவர் | 1 |
மொத்த வாக்காளர்கள் | 2,12,246 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 48. ஆம்பூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | அஸ்லம் பாட்ஷா | எம்.ஏ.எம்.ஏ.கே | 60361 |
2 | விஜய் இளஞ்செழியன் | காங்கிரஸ் | 55270 |
3 | E. சம்பத் | சுயேச்சை | 6553 |
4 | G. வெங்கடேசன் | பி.ஜே.பி | 6047 |
5 | சமீல் அகமது | சுயேச்சை | 1752 |
6 | C. கோபி | சுயேச்சை | 1485 |
7 | S. சுந்தர் | பி.எஸ்.பி | 1468 |
8 | S A ஹமீத் | சுயேச்சை | 1414 |
9 | பஷீர் அகமது | ஐ.ஜே.கே | 1074 |
10 | சையத் பக்ருதின் | ஐ.என்.எல் | 974 |
11 | N .ரஹ்மான் | சுயேச்சை | 751 |
137149 |