மற்றவை

மத்திய அரசு திட்டங்கள் மறைக்கப்படுகிறது: தமிழக அரசு மீது தங்கபாலு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை, தமிழக அரசு மறைப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் தங்கபாலு குற்றம் சாட்டினார்.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விக்டரி ஜெயக்குமாரை ஆதரித்து, அக்கட்சி சார்பில் பிரச்சாரம் ஆவடியில் நடைபெற்றது. இதில் தங்கபாலு பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊர்தி சேவை, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் திட்டம், இந்திரகாந்தி பேருகால உதவித் திட்டத்தின் கீழ், கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்களுக்கு மூன்று தவணையாக ரூ.12 ஆயிரம் நிதியுதவி, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் இலவச ஓய்வூதிய திட்டம், கல்விக் கடன் ரூ.2,600 கோடி தள்ளுபடி ஆகியவற்றை காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. இதுபோன்று, செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங் களை, மாநில அரசு மறைத்து வருகிறது.

பாஜக மீண்டும் ராமர் கோயிலை கட்ட உள்ளதன் மூலம், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. குஜராத் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், அங்கு பணக்காரர்களுக்கு மட்டும்தான் மின்சாரம் கிடைக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் அவர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக பாஜக உள்ளது. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

SCROLL FOR NEXT