பிரதமர் மன்மோகன் சிங் பலவீனமானவர் என்ற குற்றசாட்டு அடிப்படை ஆதரமற்றது, அவரது நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் கூறப்பட்டது என பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக (2004-08) இருந்த சஞ்சய பாரு ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்- தி மேக்கிங் அண்ட் அன்மேக் கிங் ஆப் மன்மோகன் சிங்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், "ஐ.மு. கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அதிகாரம் இல்லை. பிரதமர் அலுவலகத்துக்கும் அமைச்சரவைக்குமான முக்கிய நியமனங்களை ‘சோனியா தான் தீர்மானித்தார். கட்சிக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது என்று பிரதமர் என்னிடம் கூறினார்" என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சஞ்சய பாரு-வின் புத்தகத்தின் மூலம் ‘மன்மோகன் பலவீனமான பிரதமர்’ என்ற கூற்று மெய்ப்பிக் கப்பட்டிருக்கிறது என்று பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஏற்கெனவே இது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கமளித்திருந்தது, இந்நிலையில் பிரதமரின் அறிவியல் ஆலோசகரும் பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானியுமான சி.என்.ஆர்.ராவ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
தேர்தல் ஆதாயம்:
‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்- தி மேக்கிங் அண்ட் அன்மேக் கிங் ஆப் மன்மோகன் சிங்’ என்ற புத்தகம் ஏன் தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய ராவ், இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக கூறினார்.
கல்வி நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராவ் இவ்வாறு தெரிவித்தார்.
ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம்:
கல்வி, மற்றும் ஆராய்ச்சி துறையில் இந்தியா அதிக முதலீடு செய்ய வேண்டும் என ராவ் வலியுறுத்தினார். வளர்ந்த நாடுகள் ஜி.டி.பி ( ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தில்) 6% கல்வி மற்றும் ஆராய்சிகளுக்கு செலவிடும் போது இந்தியா வெறும் 2% மட்டுமே செலவிடுவதாக வருத்தம் தெரிவித்தார்.