காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுவதைப் போன்று வாக்காளர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.
இது தொடர்பாக அமிர்தசரஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அருண் ஜேட்லி மேலும் கூறுகை யில், “வியாழக்கிழமை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், நாட்டின் பாதி தொகுதிகளில் தேர்தல்கள் முடிந்துவிட்டன. இப்போதைய நிலையில், மூன்றா வது அணிக்கு ஆதரவு இல்லை என்பது தெரிந்துவிட்டது. காங்கிரஸ் மிகவும் பின்தங்கியுள்ளது.
காங்கிரஸ் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பதை ராகுல் காந்தி ஒப்புக் கொள்ள வேண்டும். காங்கிரஸிற்கு எதிராக வாக்களித்து வரும் அவர்கள் யாரும் முட்டாள்கள் அல்ல. தோல்வி ஏற்படப்போகும் சூழ்நிலையால் தலைமைப் பதவியில் இருப்போர் கனிவாக பேசும் கண்ணியத்தை இழந்துவிடக் கூடாது.
தகுந்த காரணங்களுக்காகத் தான் காங்கிரஸிற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். கடும் கோபத்தில் வாக்காளரை முட்டாள் என அழைக்கக்கூடாது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். நரேந்திர மோடிக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்தியர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி, நிலையான ஆட்சியை யார் அளிப்பார்கள் என்பதுதான்” என்றார்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “வாக்காளர்களை முட்டாளாக்கு வதை நரேந்திர மோடி நிறுத்த வேண்டும்” என்று பேசினார். அதற்கு பதில் அளித்து அருண் ஜேட்லி இவ்வாறு கூறியுள்ளார்.