திருவனந்தபுரம்: டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக ‘மெட்ரோ மேன்’ என்று பாராட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இ.தரன் அங்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்தார். ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட தரன் தோல்வியடைந்தார். இந்நிலையில், சொந்த ஊரான பொன்னணி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் நேற்று மெட்ரோ மேன் தரன் கூறியதாவது:
தேர்தலில் தோல்வி அடைந்தது என்னை புத்திசாலி ஆக்கியது. நான் வெற்றி பெற்றிருந்தாலும் எதுவும் நடந்திருக்காது என்பதை உணர்கிறேன். அதிகாரப் பதவியில் இருந்திருக்கிறேனே தவிர, நான் அரசியல்வாதியாக இருந்தது இல்லை. எனக்கு வயது 90 ஆகிறது. இளைஞர்களைப் போல என்னால் ஓடமுடியாது. எனவே, நான் தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன். மூன்று அறக்கட்டளைகளில் பங்கு வகிக்கிறேன். என் வாழ்வின் மீதி நாட்களை அந்த அறக்கட்டளைகள் மூலம் பணி செய்வதில் கழிப்பேன். இவ்வாறு மெட்ரோ மேன் தரன் தெரிவித்தார்.