Regional01

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் :

செய்திப்பிரிவு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்தல் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதில், ஓவியம் வரைதல், சுவரொட்டி வரைதல், ஒரு வரி விழிப்புணர்வு வாசகம் எழுதுதல், பாட்டு, குழு நடனம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் இடம்பெறும். போட்டிகள் முதலில் மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியால் நடத்தப்படும்.

இப்போட்டியில் பங்கேற்கத் தவறிய மாணவர்கள், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்தின் (www.elections.tn.gov.in) மூலமாக இணையவழியில் கலந்துகொள்ளலாம்.

இணையவழி போட்டிக்கான கருத்துரு, தேர்தல்கள், 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு மற்றும் வாக்களிப்பை மேம்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் ஆகியவை ஆகும்.

இப்போட்டியில் டிசம்பர் 31 அன்று மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT