குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
குன்றத்தூரில் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1,300 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் வெளி நபர்கள் பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைகின்றனர். பள்ளி முழுவதும் குப்பை குவிந்தும் சிதறியும் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால்,மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. அதனால், திறந்தவெளியையும், சாலை ஓரத்தையும் பயன்படுத்துகின்றனர்.
பள்ளி வளாகத்துக்குள் எங்குபார்த்தாலும் குப்பை அதிகமாக உள்ளது. குப்பையை அப்புறப்படுத்த பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் கூறியதாவது: எங்கள் பள்ளிக்கு காவலாளி இல்லை. தூய்மைப் பணியாளர் இல்லை. போதிய கழிப்பறை வசதி இல்லை. சுற்றுப்புறத்தைச்சேர்ந்த மக்கள் பள்ளி வளாகத்தில்குப்பையை கொட்டுகின்றனர்.
பள்ளியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. குப்பையை அகற்ற கொல்லச்சேரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவைத்தும் அவர்கள் நடவடிக்கைஎடுக்கவில்லை. உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறியதாவது: பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகத்தைதூய்மையாக வைத்திருக்க எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சுகாதார சீர்கேடுகடுமையாக உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் முகக்கவசம் சரியாக அணிவதில்லை. பல மாணவர்களும் முகக்கவசம் அணியவில்லை. சுகாதார சீர்கேடுஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.