திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டம் குரும்பேரி அருகே 15 வயது சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரது பெற்றோர் சிறுமியை திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்ததில், சிறுமியின் கர்ப்பத்துக்கான காரணம் தனது சகோதரியின் கணவரான ராஜ்குமார்(26) என்பது தெரியவந்தது.இதுகுறித்து திருப்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மகளிர் காவல் துறையினர் ராஜ்குமார் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல, திருப்பத்துாரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கௌதம் பேட்டையைச் சேர்ந்த மனோஜ் குமார்(21) என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். அதன்பேரில், சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மனோஜ்குமார் மீது மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.