தமிழக காவல் துறையினருக்கான 61-வது தடகள விளையாட்டு போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.
கோவை நேரு விளையாட்டரங்கில் நாளை (டிச.17) வரை நடைபெறும் இப்போட்டியில், ஆயுதப்படை, சென்னை பெருநகர காவல் துறை, வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டல காவல் துறை அணிகள் உட்பட மொத்தமாக 7 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர், மகளிர் என தனித்தனியாக போட்டி நடைபெறுகிறது. 450 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க விழாவில், தமிழக ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் கலந்து கொண்டு, வீரர்கள் ஏந்தி வந்த விளையாட்டு ஜோதியைப் பெற்று, போட்டியைத் தொடங்கி வைத்தார். கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மேற்கு மண்டல காவல் ஐ.ஜி. சுதாகர், சென்னை ஆயுதப்படை டிஐஜி எழிலரசன், கோவை மாநகர காவல் துணை ஆணையர்கள் ஜெயச்சந்திரன், உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டம், மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டம், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.