தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஐயப்ப சுவாமி திருவாபரணப் பெட்டியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
Regional01

அச்சன்கோவில் ஐயப்ப சுவாமி திருவாபரண பெட்டி வருகை : தென்காசியில் பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

அச்சன்கோவில் ஐயப்ப சுவாமி கோயில் திருவாபரணப் பெட்டி தென்காசிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மகோற்சவ திருவிழா நடைபெறும். விழாவில், சுவாமி ஐயப்பனுக்கு தங்க வாள், நகைகள், கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணப் பெட்டி கேரள மாநிலம் புனலூர் கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து வரப்பட்டது. திருவாபரணப் பெட்டி வாகனம் புளியரை, செங்கோட்டை வழியாக நேற்று மதியம் தென்காசிக்கு கொண்டுவரப்பட்டது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு வாகனம் நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவாபரணப் பெட்டி வரவேற்புக் குழு பொறுப்பாளர் ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசன த்துக்கு பின்னர், தென்காசியில் இருந்து அச்சன்கோவிலுக்கு திருவாபரணப் பெட்டி வாகனம் புறப்பட்டது. அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மகோற்சவ திருவிழா இன்று (16-ம் தேதி) தொடங்குகிறது.

SCROLL FOR NEXT