திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவ-மாணவியர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

கல்லூரி பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம் : சுந்தரனார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி தகவல்

செய்திப்பிரிவு

‘கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு நிபுணர்கள் பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி தெரிவித்தார்.

திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

உயர் கல்வியில் அகில இந்திய அளவில் சிறப்பான இடத்தில் தமிழகம் இருக்கிறது. அகில இந்திய அளவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 21.1 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் அது 41.4 சதவீதமாக இருக்கிறது. தமிழகத்தில் தொடக்க கல்வி வளர காமராஜர் காரணமாக இருந்தார். அதுபோல் உயர் கல்வி வளர்ச்சிக்கு கருணாநிதி அடித்தளமிட்டார். தற்போது உயர்கல்வியின் வளர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அதிக அக்கறை செலுத்துகிறார். உயர்கல்வி வளர்ச்சிக்காக வல்லுநர் குழுவை அமைத்திருக்கிறார்.

அரசு விழாக்களில் மனோன் மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பாடுவதை கருணாநிதி கட்டாயமாக்கினார். தற்போது அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும், தேசிய கீதத்தையும் இசைத்தட்டில் இசைக்காமல் அனைவரும் சேர்ந்து பாட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் உணர்வு பூர்வமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும். எந்த மொழி மீதும் நமக்கு வெறுப்பு இல்லை. ஆனால் நமது தாய்மொழி வளர வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மற்ற மொழிகளை கற்பது அவரவர் விருப்பம். தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வியை பன்னாட்டு தரத்துக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். ஆராய்ச்சி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் உயர் கல்வியில் பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கையில் பெண்களே அதிகம்.

ஆசிரியர்களது திறமையை மேலும் வளர்க்க தேவையான பயிற்சி அளிப்பது அவசியம். எனவே கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு நிபுணர்கள் பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

பாரதியார் இருக்கை

பட்டமளிப்பு விழா உரையாற்றிய திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆர் இயக்குநர் அ. அஜயகோஷ் பேசும்போது, “நாட்டிலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், சிஎஸ்ஐஆர் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களை அதிகளவில் தொடங்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கு விக்கவும், தொழில்முனைவோரை அதிகரிக்கவும் வேண்டும்” என்றார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், ராஜா, பழனிநாடார், பல்கலைக்கழக பதிவாளர் அர.மருதகுட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் 73 வயது முதியவர் வை. தங்கப்பன் முனைவர் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரிய த்துக்கு உள்ளாக்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தங்கப்பன். இம்மாவட்டத்தில் திற்பரப்பு, மண்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவசம்போர்டு பள்ளிகளில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். திருமணமாகவில்லை. ஏற்கெனவே எம்.ஏ. வரலாறு, எம்.எட், பிஏஎல் போன்ற படிப்புகளை முடித்திருக்கிறார்.

காந்திய தத்துவத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாக “காந்திய தத்துவமும், இன்றைய பயங்கரவாத உலகத்தில் அதன் தேவையும்” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் எஸ். கனகம்மாள் இவருக்கு முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக இருந்தார். 8 ஆண்டுகள் ஆய்வுக்குப்பின் முனைவர்பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்து தற்போது ஆளுநரிடமிருந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “கல்வி கற்பதற்கு வயது தடையில்லை. காந்திய தத்துவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT