National

ஒமைக்ரான் நோயாளிக்கு போலி ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கொடுத்த நால்வர் கைது :

இரா.வினோத்

பெங்களூருவில் ஒமைக்ரான் நோயாளி ஒருவருக்கு போலி ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் கொடுத்து தப்பிக்க உதவிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 21-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த அந்நாட்டு மருந்து நிறுவன ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவிட்டனர். மேலும் அவரது மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது டிசம்பர் 2-ம் தேதி தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவரை தேடியபோது அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்ததில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அந்த நபர் நவம்பர் 27-ம் தேதி போலி ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் பெற்று நாட்டை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த‌ பெங்களூரு போலீஸார், போலி கரோனா சான்றிதழ் கொடுத்ததாக எஸ்.ஆர். பரிசோதனை மையத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இதுபோல் எத்தனை பேருக்கு போலி சான்றிதழ்கள் கொடுத்திருக்கிறார்கள் என விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT