மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன். அருகில் தென்மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகனன், எஸ்பி கார்த்திக் ஆகியோர். படம்: ஆர்.அசோக் 
TNadu

காவல் துறையினர் தாக்கி உயிரிழக்கவில்லை - ராமநாதபுரம் மாணவர் விஷம் குடித்து தற்கொலை : கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தகவல்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. விஷம் குடித்து இறந்ததாக தடயவியல் துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது என சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவலில் கல்லூரி மாணவர் ஒருவர் டிச.4-ம் தேதி உயிரிழந்தது குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு டிச.4-ம் தேதி அழைத்து வரப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் இறந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின. இதன் உண்மை நிலை குறித்து ஆராயப்பட்டது.

கீழத்தூவல் பகுதியில் போலீஸார் அன்று மாலை வாகனத் தணிக்கை செய்தனர். அப்போது மணிகண்டனும், அவருடன் மற்றொரு நபரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் போலீஸார் பின்தொடர்ந்தபோது, மணிகண்டனுடன் வந்தவர் இறங்கி தப்பினார்.

மணிகண்டனை போலீஸார் பிடித்து மோட்டார் சைக்கிளுடன் கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரது மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணம் இல்லை எனத் தெரிய வந்தது.

கல்லூரி மாணவர் என்பதால் இரவு 7.30 மணிக்கு மொபைல் மூலம் அவரது தாயாரை காவல் நிலையத்துக்கு போலீஸார் வர வழைத்தனர். அங்கு வந்த அவரது தாயார் மற்றும் உறவினருடன் மணிகண்டனை 8.15 மணிக்கு வீட்டுக்கு நல்ல முறையில் அனுப்பி வைத்தனர். இவை அனைத்தும் காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இருப்பினும் அதிகாலை 2 மணிக்கு மணிகண்டன் இறந்தது தெரிய வந்தது. அவர் ஆம்புலன்ஸில் வரும்போதே இறந்ததற்கான தகவலும் உள்ளது. ஆனால்அவரது தம்பி அலெக்ஸ் பாண்டியன் காவல் நிலையத்தில் மறுநாள் கொடுத்த புகாரில், காவல் துறையினர் தாக்கியதில் மணிகண்டன் இறந்ததாகக் கூறியிருந்தார்.

காவல் துறையினர் மீது புகார்எழுந்ததால் டிஎஸ்பி, பரமக்குடிஆர்டிஓ அளவில் விசாரிக்கப்பட்டது. 5-ம்தேதி 2 மருத்துவர்கள், மாணவரின் குடும்பத்தினர் சார்பில் ஒரு மருத்துவர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

மாணவரின் குடும்பத்தினருக்கு திருப்தி இல்லாததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், தடய அறிவியல் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் 8-ம் தேதி மறு பிரேதப் பரிசோதனை செய்தனர். இதுவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிகண்டன் உடலில் சேகரித்த உறுப்புக்களை தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து இறுதி அறிக்கை வழங்கினர். இதன் மூலம் மாணவர் மணிகண்டன் விஷம் குடித்து இறந்தது தெரிய வந்தது. காவல் துறையினர் தாக்கிஅவர் உயிரிழக்கவில்லை என்பதும் தெரிந்தது.

இது குறித்து மணிகண்டன் குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எதற்காக அவர் விஷம் குடித்தார். அவருடன் வந்து தப்பியவர் யார்?, விஷம் அருந்த என்ன காரணம்? போன்ற கோணங்களில் தொடர்ந்து விசாரிக்கிறோம்.

மணிகண்டன் பயன்படுத்திய பைக் திருடப்பட்டது என்பதால் அது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதன் பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தென்மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகனன், ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக், மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT