உதகை அருகே சோகத்தொரை தேனலை கிராமத்தில் வசித்து வந்தவர் ருக்கு (68). கணவர் நஞ்சன்உயிரிழந்த நிலையில், ருக்கு தனியாக வசித்து வந்தார். இவரது மகன் ரவிக்குமார் (49)திருமணமாகி கோவையில் வசித்துவருகிறார்.
இவர், தினமும் ருக்குவிடம், தொலைபேசியில் பேசுவது வழக்கம். நேற்று முன்தினம் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் ருக்கு அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் தனது உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுதன்னுடைய தாய் வீட்டுக்குச்சென்று பார்க்கும்படி ரவிக்குமார் கூறியுள்ளார். உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். ருக்கு வசிக்கும் வீட்டின் இரண்டு கதவுகளும் பூட்டியிருப்பதாகவும், தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை எனவும் ரவிக்குமாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை தேனலைக்கு வந்த ரவிக்குமார்,ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் ருக்கு சடலமாக கிடந்தது தெரியவந்தது.புகாரின் பேரில், கேத்தி காவல் நிலைய ஆய்வாளர் (பொ) செந்தில்குமார், உதவி ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். ருக்கு காதில் அணிந்திருந்த தங்க நகை, மோதிரம் ஆகியவை திருட்டுப்போனது, கண்டுபிடிக்கப்பட்டது. ருக்குவை நகைக்காக மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.