Regional03

பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் - மூன்று தென்னை நார் தொழிற்சாலைகள் மூடல் :

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டுவந்த 3 தென்னைநார் தொழிற்சாலைகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் மூடப்பட்டன.

பொள்ளாச்சி அருகேயுள்ள திம்மங்குத்து ஊராட்சியில் 3 தென்னைநார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்கள் காற்றில் கலப்பதால் மாசு ஏற்படுவதாகவும், வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசுபடுவதாகவும், தொழிற்சாலைக்கு ஆழியாறு ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், 3 தென்னை நார் தொழிற்சாலைகளையும் மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்படி, தொழிற்சாலையை மூடுவதற்காக, ‘நிறுவன மூடல்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுவரும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நேற்று 3 தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்பாது, ‘‘ஜெனரேட்டர் வைத்து தொழிற்சாலையை இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தெரியவந்தால் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT