பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் சமையலர் பணிக்கு கடந்த ஆண்டு நடந்த நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளில் காலியாக இருந்த 28 சமையலர் பணியிடங்கள் நிரப்ப நேரடியாகவும் மற்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகத்திலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது.
இதில் தேர்வு பெற்றவர்களை, மாநில அளவிலான தேர்வுக்குழு இதுவரை இறுதி செய்யவில்லை.
கடந்த ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டு ஆறுமாதங்கள் கடந்து விட்டதாலும், நிர்வாகக் காரணங்களாலும், இந்த சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுப்பணிகள் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.