சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவில், மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் வாகன வீதியுலா, சிறப்புபூஜைகள் நடைபெற்று வருகின்றன. 3-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை புஷ்பக விமானத்தில் சுவாமி உலாவரும் நிகழ்ச்சியும், மாலையில் காசிமடம் மண்டகப்படிக்கு எழுந்தருளலும், இரவு கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீதியுலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.
இரவு 11 மணியளவில் கோட்டாறு வலம்புரி விநாயகர், வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சுவாமிகள் சுசீந்திரம் திருவிழாவில் பங்கேற்று, தமது தாய் தந்தையரான தாணுமாலய சுவாமியையும், அம்பாளையும் சந்திக்கும் பாரம்பரியமிக்க `மக்கள்மார் சந்திப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் வாசலில் எழுந்தருளிய தாணுமாலய சுவாமி, அம்பாள் ஆகியோரை, கோட்டாறு வலம்புரி விநாயகர், வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் 3 முறை வலம்வந்து, பின்னர் ஒன்றாக காட்சிதந்தனர். அனைத்து சுவாமிக்கும் ஒரேநேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில், நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு பரங்கி நாற்காலியில் சுவாமி உலா நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு கருட தரிசனம் நடைபெறுகிறது. வரும் 19-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. விநாயகர், அம்மன், தாணுமாலய சுவாமி ஆகிய 3 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். வழக்கமாக சுசீந்திரம் தேரோட்டம் அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்டம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகிறது.