Regional02

பருவதமலை கோயிலில் தரிசனம் செய்ய தடை : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மார்கழி மாத பிறப்பு உற்சவத்தையொட்டி பருவதமலை மீது ஏறி சென்று மல்லிகார்ஜுன கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் பருவதமலையில் உள்ள மல்லிகார்ஜுன கோயில் மற்றும் கரைகண்டீஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பிறப்பு உற்சவம் வரும் 16-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இதையொட்டி பருவதமலை மீது ஏறி சென்று அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கூடுவார்கள்.

மிக குறைவான இட வசதி மட்டுமே உள்ள இடத்தில் பக்தர்கள் அதிகளவில் கூடும்போது, கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவது கடினமாகும்.

கரோனா தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்பதால், பருவதமலை மீது ஏறி சென்று, மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதற்கு, பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT