காஷ்மீரில் ஆயுதப்படை போலீஸார் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
காஷ்மீரில் நகரின் புறநகர் பகுதியான செவான் அருகே ஜம்மு காஷ்மீர் ஆயுத போலீஸ் படையின் 9-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் நேற்று மாலையில் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாந்தா சவுக் என்ற இடத்தில் பேருந்து மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் 14 போலீஸார் காயம் அடைந்தனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்த போலீஸார் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் உதவி சப்-இன்ஸ்பெக்டர், தேர்வு நிலை காவலர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். சிகிச்சையில் இருக்கும் 12 பேரில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் டிஜிபி எஸ்.பி.வைத் கூறும்போது, “உள்ளூர் போலீஸாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உள்ளூர் போலீஸார் முக்கியப் பங்கு வகிப்பதை உணர்ந்துள்ள வன்முறையாளர்கள் அவர்களை குறி வைத்துள்ளனர்” என்றார்.
இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “நகரின் புறநகர் பகுதியில் போலீஸ் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கொடூர மானது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அதே நேரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் காயம் அடைந்தவர்களுக்கு எனது பிரார்த்தனைகளையும் தெரிவித் துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். - பிடிஐ