தமிழக சட்டப்பேரவையின் 2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜன.5-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை அரங்கில் கூட்டம் நடக்கும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பாரம்பரியமான பேரவை கூட்ட அரங்கில்தான் நடக்கும். கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி இருந்ததால், கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பேரவை அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு அங்குதான் பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கரோனா பாதிப்பு குறைந்ததால், 2022-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை அரங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால், சட்டப்பேரவை கூட்டம் பழைய அரங்கில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். அதன்பின், பட்ஜெட் தாக்கல், மானிய கோரிக்கை விவாதங்களுக்கான கூட்டங்கள் நடைபெறும். அதேநேரத்தில் பேரவைக்கு வரும் அனை வரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
எல்லா பணிகளும் காகிதமில்லாமல் தொடுதிரை உதவியுடன் நடத்தப்படும். பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் காலதாமதம் இல்லாமல் நிறைவேற வேண்டும் என்ற கருத்து, சிம்லாவில் நடந்த பேரவைத் தலைவர்களின் மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. நான் பேசிய அந்த கருத்துகளை ஆளுநரிடம் நேரில் சொல்லப் போவதில்லை, சொல்லவும் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்
சட்டப்பேரவை குழுக்களின் பணிகளை கண்காணிக்க நாடாளுமன்றத்தில் இருந்து அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த மு.அப்பாவு, ‘‘மத்திய அரசும் மாநில அரசும் இணைந்துதான் பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. அனைத்து திட்டங்களுமே மாநில அரசு மூலமாகத்தான் செயல்படுத்தப் படுகின்றன. எனவே, கண்காணிப்பதற்கான அவசியம் எதுவும் எழவில்லை. தமிழக முதல்வரை நம்பர் 1 முதல்வர் என்று பத்திரிகை கூறியுள்ளதால், இங்கு எப்படி பணிகள் நடக்கிறது என்பதை பார்வையிட்டு, மற்ற மாநிலங்கள், நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்க அவர் வந்திருக்கலாம்’’ என்றார்.