செஞ்சி அருகே மேல்ஒலக்கூரைச் சேர்ந்தவர் அன்பு (40). மாற்றுத் திறனாளியான இவர், நேற்று தன் மனைவி சித்ரா மற்றும் தனது 5 மகள்களான கயல்விழி (13), முத்தமிழரசி (11), பிரியாமணி (9), இலக்கியா (8) மற்றும் ஒரு மாத கைக்குழந்தையான அத்தலட்சுமி ஆகியோருடன் விழுப்புரம் ஆட்சியரிடம் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி வந்ததை பார்த்த ஆட்சியர், தனது அறைக்கு அவரை அழைத்து கோரிக்கை மனுவை பெற்றார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் எம்ஏ, பிஎட் படித்துள்ளேன். 3 வயதில் போலியாவால் பாதிக்கப்பட்டு, கால் ஊனமானது. எனக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். 4 பெண் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது மாற்றுத்திறனாளி மாதந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வருகிறது. இதை வைத்து குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டபட்டு வருகிறேன். மாற்றுத்திறனாளி என்பதால் வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனது 5 பெண் பிள்ளைகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளின் பராமரிப்பு செலவிற்கும் பணமில்லாமல் தவிக்கிறேன். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள எனக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மோகன், “குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. படித்தவர்களே இப்படி செய்யலாமா!” என்று அறிவுரை வழங்கி, மனு மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அன்புவின் மகள்களிடம் நன்கு படிக்குமாறு அறிவுரை வழங்கினார்.