விருத்தாசலம் விருத்தகிரீஸ் வரர் கோயில் கும்பாபிஷே கத்தையொட்டி பந்தக்கால் நடும் விழா நடந்தது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இது 1,500 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். ஐந்து கோபுரங்கள், ஐந்து நந்திகள், ஐந்து கொடிமரங்கள், ஐந்து தேர்கள், ஐந்து பிரகாரங்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்புடைய கோயிலாகும்.
இந்த கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. வருகிற பிப்ரவரி மாதம் 6 ம் தேதிகும்பாபிஷேகம் நடத்த திருப்பணி கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாகசிவாச்சாரியர்கள் விருத்தகிரீஸ் வரர் விருத்தாம் பிகை, பாலாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால் தயிர் மோர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து காலை கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
தருமபுரம் ஆதீனம் தம்பிரான் கட்டளை சுவாமிகள் கலந்து கொண்டு சன்னதி வீதியில் கிழக்குக் கோபுர நுழைவு வாயில் முன்பும், யாகசாலை மண்டபம் அமைக்கும் இடத்திலும் பந்தக்கால் நட்டு வைத்தார். இதில் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த், கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, பார்த்தசாரதி மற்றும் கும்பாபிஷேக கமிட்டி குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.