Regional02

ஆன் லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு - ரூ. 6 லட்சத்தை இழந்த பெண் தேனி சைபர் கிரைமில் புகார் :

செய்திப்பிரிவு

ஆன் லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரூ. 6 லட்சத்தை இழந்த பெண் ஒருவர், இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.

தேனி மாவட்டம், போடி அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சங்கீதா. பட்டதாரியான இவர் ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்டுவது குறித்து சமூக வலைதளங்களில் விவரம் தேடினார். அப்போது லிங்க் மூலம் வாட்ஸ்ஆப்-ல் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும். விற்ற பிறகு முன் தொகையும், கமிஷனும் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொருட்களின் விலை குறைவாக இருந்ததால் அவற்றை எளிதில் விற்றதுடன், அதற்கான தொகையையும் பெற்றுள்ளார்.

ஆனால், அடுத்தடுத்து அதிகமான தொகையுடன் பொருட்களை விற்க வலியுறுத்தப்பட்டது. விற்ற பிறகும், தொடர்ந்து அடுத்தடுத்த பொருட்களை விற்றால் மட்டுமே இதுவரை செலுத்திய முதலீடு, கமிஷன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.5.32 லட்சத்தை சங்கீதா இழந்துள்ளார்.

இம்மோசடி குறித்து அவர் தேனி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.

இதே போல் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் ரூ. 1.17 லட்சத்தை இழந்தார்.

இப்புகார்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் ரெங்கநாயகி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT