பட்டா வழங்காத அதிகாரிகளை கண்டித்து காரைக்குடி சாலையில் மறியல் செய்த கருணாநிதி நகரைச் சேர்ந்த மக்கள். 
Regional02

காரைக்குடி கருணாநிதி நகரில் வசிக்கும் மக்கள் - பட்டா வழங்கக்கோரி சாலை மறியல் :

செய்திப்பிரிவு

பட்டா வழங்கக்கோரி தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே காரைக்குடி சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்குடி கணேசபுரம் கருணாநிதி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றன. இதையடுத்து அவர்களில் பலருக்கு 2008-ம் ஆண்டு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாக்களில் கருணாநிதி நகர் என்பதற்கு பதிலாக கழனிவாசல் என தவறுதலாக இருந்தது.

இதையடுத்து பட்டாக்களை திருத்தம் செய்து கொடுக்கவும், விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்க கோரியும், 13 வருடமாக போராடி வந்தனர். அதிகாரிகள் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பட்டா வழங்க சிலர் பணம் வாங்குவதாக புகார் எழுந்ததை அடுத்து, அப்பணியை அதிகாரிகள் நிறுத்தினர்.

இந்நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோர் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போது கோட்டாட்சியர் சிங்கம்புணரி அருகே மீட்புப் பணிக்குச் சென்றிருந்தார். இதனால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை வட்டாட்சியர் அந்தோணிராஜ் அவர்களை சமரசப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறுகையில், சிலர் பணம் வசூலிப்பதாக கூறிய பெய்யான காரணத்துக்காக பட்டா வழங்கும் பணியை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். உரிய விசாரணை நடத்தி உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் கூறியதாவது: பட்டா கொடுக்க கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் சிலர் சங்கம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. விரைவில் பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT