CalendarPg

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் - சென்னை புத்தகக் காட்சி ஜன.6-ம் தேதி தொடக்கம் : முதல்வர் தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

பபாசியின் 45-வது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6-ம் தேதி தொடங்க உள்ளது. இக்கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். புத்தகக் காட்சிக்கு 12 லட்சம்பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சிநடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான 45-வது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் பல்வேறு புதிய நூல்கள் வெளியிடப்படுவதுடன், கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரைப்போட்டிகள், சிறந்த எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் ஆகியவையும் நடத்தப்பட உள்ளன.

புத்தகக் காட்சியை நடத்துவதற்கான அரங்குகள் அமைத்தல், பார்வையாளர்களுக்கான வசதிகள் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு சுமார் 12 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக பதிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT