திருட்டு நடைபெற்ற வீட்டில் கை ரேகைகளை சேகரித்த தடயவியல் நிபுணர். 
Regional02

திருவண்ணாமலை அருகே - விவசாயி வீட்டில் 28 பவுன் நகை திருட்டு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அருகே விவசாய வீட்டில் 28 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தி.மலை அடுத்த வேங்கிக்கால் துரைராஜ் நகரில் வசிப்பவர் விவசாயி கோவிந்தராஜ்(60). இவர், தனது சொந்த கிராமமான தண்டராம்பட்டு அடுத்த போந்தை கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாய பணிக்காக மனைவி கலாவதியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார்.

இந்நிலையில், அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 28 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல், அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதனால், பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இது தொடர்பாக, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தபோது, வீட்டில் 1 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் மட்டும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையறிந்து சம்பவ இடத் துக்கு சென்ற திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர், திருடு நடைபெற்ற 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் காவல் துறையினரின் விசாரணை நடை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT