மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆளுநர்ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்துக்கு நேற்று வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள், பாரதியார் வேடமணிந்துப் பங்கேற்றனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, திறம்பாட வந்த மறவன், அறம்பாட வந்த அறிஞன், படரும் சாதிப்படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் இன்று. தமிழுக்குத் தொண்டு செய்த, அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில், காமராஜர் சாலையில் உள்ள பாரதி சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ-க்கள் த.வேலு, ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா,செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
சத்தியமூர்த்தி பவனில் மாநில துணைச் செயலர் பலராமன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில்,காமராஜர் சாலையில் பாரதியார் சிலைக்கு, மாநிலப் பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் மாலை அணிவித்தார்.
நூல் வெளியீட்டு விழா
பல்வேறு கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பாரதியார் பிறந்த நாள் தொடர்பாக பதிவிட்டுஉள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பாரதியார் மறைந்து நூறாண்டு ஆனாலும், அவரது கவிதை நெருப்பும், கருத்து நெருப்பும் இன்றும் கனன்று கொண்டேதான் இருக்கின்றன. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அவரது எழுத்துகளைத்தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. வெல்கபாரதியார். நனவாகட்டும் பாரதியின் கனவுகள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசன்: காலத்தின் இயக்கத்தை வென்று, நிலைநிறுத்திவிடுகிற வல்லமையைத் தன் கவிதைகளாலும், அரசியல் கருத்துகளாலும் அடைந்தவன் என் பிரிய மாகவி பாரதி. பிறந்தநாள் வணக்கங்கள்.
அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன்: தேசபக்தி, தெய்வபக்தி, தமிழ் மொழி மீது மாளாத பற்று என தனித்துவக் கவிஞராக திகழ்ந்த அந்த மகா கவிஞனைபோற்றிக் கொண்டாடுவோம்.