சிறைக்குள் கைதி மரணமடைந்த வழக்கில் ஓய்வு பெறும் நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஏட்டுவுக்கு எதிரான துறை ரீதியிலான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தில் கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முருகன் என்பவர் 4 மாதங்களுக்குப் பிறகு மரணமடைந்தார். அதையடுத்து அவரை கைது செய்த மல்லியக்கரை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஏட்டு சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2017 ஜூன் 30 அன்று பணி ஓய்வு பெற இருந்த ஏட்டு சத்தியமூர்த்தி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதை எதிர்த்து சத்தியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் கைதி முருகனின் மரணம் இயற்கைக்கு முரணானது அல்ல என ஆத்தூர் நீதித்துறை நடுவர் மற்றும் சேலம் காவல் உதவி ஆணையர் மற்றும் மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளதால் தனக்கு எதிரான இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.டி.அருணன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, ஏட்டு சத்தியமூர்த்திக்கு எதிரான துறை ரீதியிலான வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.