Regional01

நதி நீர் இணைப்பு திட்டத்தில் தரமற்ற // சுவர் கட்டியவர்கள் மீது நடவடிக்கை : உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

நதி நீர் இணைப்பு திட்டத்தில் தரமற்ற கான்கிரீட் சுவர் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம், வெள்ளநீர் வடிகால் திட்டத்தின் கீழ் வெள்ளை குழிதலை மதகு முதல் கல்லிடைகுறிச்சி வரையிலும் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சுவர் தரமற்ற வகையில் உள்ளது. சுவரை தொட்டாலே உதிர்ந்து விழுகிறது. இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தரமற்ற கான்கிரீட் கட்டுமானத்தை மேற்கொண்டவர்கள் மீதும், இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அமர்வு, மனுதாரர் புகாரின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் விவரம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT