CalendarPg

அலுவலர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் - தமிழில் முன்னெழுத்துடன் கையெழுத்து போடுவோம் : தமிழ் வளர்ச்சித் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

முதல்வர் முதல் கடைநிலை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் தமிழில் முன்னெழுத்துடன் கையெழுத்திடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அரசாணை:

2021-22-ம் ஆண்டுக்கான தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் விதமாகவும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

அதன்படி, முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்களும் தங்கள் கையெழுத்தையும், முன்னெழுத்துகளையும் (Initials) தமிழிலேயே இடவேண்டும்.

தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரைவெளியிடும் ஆணைகள், ஆவணங்களில் பொதுமக்களின் பெயர்களைகுறிப்பிடும்போது முன்னெழுத்துகளுடன் பெயரை தமிழிலேயே பதிவு செய்யவேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவர்களது பெயர் மற்றும் முன்னெழுத்தை தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டுவர வேண்டும். அதற்காக,சேர்க்கை விண்ணப்பம், வருகைப்பதிவேடு, சான்றிதழ் என அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடன் வழங்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். மேலும், மாணவர்கள், பொதுமக்களும் தமிழ் முன்னெழுத்துடன் தமிழிலேயே கையெழுத்திட முன்வர வேண்டும்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனைத்து அலுவலகங்களிலும் தமிழின் பெருமையை சுட்டிக்காட்டியும், தமிழில் முன்னெழுத்துடன் கையெழுத்திடுவதை பெருமைப்படுத்தும் வகையிலும் சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT