மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான வீட்டுமனைகள் வரும் 15-ம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில ஏலம் விடப்பட உள்ளது, என மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மோகனூர் சாலையில் செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் நிதி மோசடி செய்தது தொடர்பாக நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளன.
இதன்படி பரமத்தி வேலூர் வட்டம் பிள்ளைகளத்தூர் கிராமத்தில் தலா 2360 சதுர அடி கொண்ட இரு வீட்டுமனைகள் மற்றும் ராசிபுரம் அருகே காட்டூர் காட்டுக்கொட்டாய்யில் 3716 சதுர அடி கொண்ட வீட்டுமனை ஆகியவற்றை வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏல தேதிக்கு முன்பாக நாமக்கல் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மூலமாக மேற்குறிப்பிட்ட சொத்துக்களை பார்வையிடலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.