Regional01

ஈரோட்டில் தொடர்மழையால் வைரஸ் காய்ச்சல் பரவல் : சுகாதாரத்துறை துணை இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோட்டில் தொடர்மழை பெய்து வருவதால், வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த 69 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை தொற்று எதுவும் இல்லை. அந்தந்த பகுதிக்கு உட்பட்ட செவிலியர்கள், சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

டெங்கு பரவல் தடுப்பு பணியை தீவிரப்படுத்தியதால், மாவட்டத்தில் இதுவரை 53 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். டெங்குவால் உயிரிழப்பு இல்லை. தொடர் மழையால் சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தினமும் 20 பேர் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

SCROLL FOR NEXT