முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் குன்னூரில் நேற்று பிற்பகல் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீக்கிரையானது. இதில் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
யாரும் எதிர்பாராத நேரத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேர் இறந்த விஷயம் தெரிந்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த நாடு தனது தைரியமிக்க மகன்களை இழந்துள்ளது. தாய்நாட்டுக்காக பிபின் ராவத், சுமார் 40 ஆண்டு காலம் தன்னலமற்ற சேவையைச் செய்துள்ளார். அவரது குடும் பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்தது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நமது நாட்டுக்காக அவர்கள் மிகுந்த தேசபக்தியுடன் சேவை செய்தனர். இந்த துயரமான தருணத்தில் என் எண்ணங்கள் எல்லாம் இறந்தவர்களின் குடும் பங்களுடன் உள்ளன.
முப்படைத் தளபதி பிபின் ராவத் மிகச்சிறந்த ராணுவ வீரர். உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங் கல் செய்தியில், “நமது முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் துணிச்சலான வீரர்களில் ஒருவர். தாய்நாட்டுக்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்தவர். மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் அவரது பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்புகளை வார்த் தைகளால் விவரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில், “ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவரது இழப்பு நாட்டுக்கும், முப்படைகளுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், “முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த சில ஆண்டுகளாக பிபின் ராவத்தும், நானும் பல்வேறு விஷயங்களில் மிகவும் ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளோம். அவரது மறைவு இந்த தேசத்துக்கு பேரிழப்பு" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேர் இறந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரமான தருணத்தில் என் எண்ணங்கள் எல்லாம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் உள்ளன. அவர்களது மறைவுக்கு நாடே ஒற்றுமையுடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன்ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர் அனுபம் கெர், நடிகை ஊர்மிளா மடோன்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.