Regional01

போக்குவரத்து காவலருக்கு - புது செல்போன் வாங்கிக் கொடுத்த காவல் ஆணையர் :

செய்திப்பிரிவு

பணியின்போது தன்னிடம் தகராறு செய்த நபரை வீடியோ பதிவு செய்தபோது, போக்குவரத்து காவலரின் செல்போன் உடைக்கப்பட்டது. இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தொடர்புடைய போக்குவரத்து காவலருக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

விருகம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சுதாகர். இவர் கடந்த 3-ம் தேதி காலை 11 மணியளவில் அதே பகுதி ஆற்காடு சாலை, பிரான் தெரு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடபழனியில் இருந்து போரூர் நோக்கி எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தார். அப்போது, அந்த நபர் போக்குவரத்து காவலரிடம் அவதூறாகப் பேசி தகராறு செய்துள்ளார்.

போக்குவரத்து காவலர் தனது செல்போனில் அதை வீடியோ எடுத்தபோது, கோபமடைந்த நபர் போக்குவரத்து காவலர் சுதாகரின் செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்து விட்டார். பின்னர் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து போக்குவரத்து காவலர் சுதாகர், இருசக்கர வாகனத்தை கைப்பற்றி கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தப்பியோடிய நபரை போலீஸார் தேடிவருகின்றனர். இதையறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து காவலர் சுதாகரை நேரில் அழைத்து அவருக்கு புதிய செல்போன் வழங்கினார்.

SCROLL FOR NEXT