குறைந்த விலையில் தங்கம் தருவதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் மருமகன் மற்றும் அவரது நண்பர்களிடம் ரூ.6 கோடியே 30 லட்சம் பணம் பெற்று, மோசடி செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவின் அலெக்சாண்டர் (31). இவர் மாநில முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனாவார். இவரது நண்பர்கள் கவுதம் (29) மற்றும் கணேஷ் குமார் (33). கவுதம் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்றின் டீலராகவும், கணேஷ் குமார் பாதாம், பிஸ்தா மொத்த வியாபாரமும் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பாலாஜி என்பவரது நட்பு கிடைத்துள்ளது.
பாலாஜி, தான் தங்கம், வெள்ளி, கார், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு சுங்கவரி செலுத்தாமல் இறக்குமதி செய்து விற்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த தொழிலை சுங்கத்து றையைச் சேர்ந்த சில அதிகாரிகளின் துணையுடன் செய்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது தந்தை ஐஏஎஸ் அதிகாரி எனவும் கூறியுள்ளார். தற்போது தன்னிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அதை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். இதை நம்பி பிரவின் அலெக்சாண்டர் உள்பட 3 பேரும் ரூ.6 கோடியே 30 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.
இதை பெற்றுக் கொண்ட பாலாஜி உறுதி அளித்தபடி தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த 3 பேரும் இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மோசடி தொடர்பாக சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பாலாஜி (34), அவரது தந்தை துளசிதாஸ் (59), மகேஷ் (45), மாதவரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (43) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.