அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து ஓசூரை சேர்ந்தஅதிமுக தொண்டரான ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
தடை விதிக்க வேண்டும்
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறவில்லை. எனவே, இத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்.
அதுபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரிஇருந்தார்.
பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.