சென்னை மாநகராட்சியில் சொத்து பரிமாற்றத்தின்போதே மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளிலும் பெயர் மாற்றம் செய்யும் வகையில், தொடர்புடைய துறைகளுக்கு பெயர் மாற்ற விவரங்களை தானாகவே அனுப்பும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பதிவு மண்டலத்தில், ரூ.4.56 கோடி மதிப்பில் தாம்பரம், சேலையூர் சார்பதிவாளர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், ஆலந்தூர், சாலவாக்கம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. திருநெல்வேலி மண்டலத்தில் விக்கிரமசிங்கபுரம், வேலூர் - நெமிலி, தஞ்சாவூர்- மதுக்கூர், திருச்சிராப்பள்ளி - இரும்புலிக்குறிச்சி, கடலூர் - சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், மதுரை மண்டலம் - கடமலைக்குண்டு, திருநெல்வேலி - புதுக்கோட்டை, வேலூர் - களம்பூரில் ரூ.3.18 கோடியில் சார் பதிவாளர் அலுவலகங்கள், கடலூர் பதிவு மண்டலத்தில் ரூ.2.20 கோடியில் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ.14.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 11 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள், மாவட்ட பதிவாளர் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார்.
மேலும், பதிவுத் துறையின் மென்பொருளுடன் சென்னை மாநகராட்சியின் சொத்து வரி பெயர் விவரங்கள் அடங்கிய மென்பொருள், சென்னை குடிநீர் வாரியத்தின் தண்ணீர் வரி மென்பொருள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின்கட்டணம் செலுத்துவோர் விவர மென்பொருருளும் இணைக்கப்பட்டுள்ளன.
சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பரிவர்த்தனை நடைபெறும்போது, சென்னை மாநகராட்சிக்கும், குடிநீர் வாரியத்துக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் சொத்து வரி ரசீது, தண்ணீர் ரசீது, மின் கட்டண ரசீது தொடர்பான பெயர் மாற்ற விவரங்கள் தானாகவே இணையவழியாக அனுப்பும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேலும், பணிக்காலத்தில் இறந்த 15 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 5 வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறைச் செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் ஆகியோர் பங்கேற்றனர்.